Last Updated : 22 Jan, 2019 03:09 PM

 

Published : 22 Jan 2019 03:09 PM
Last Updated : 22 Jan 2019 03:09 PM

வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஓட்டுரிமை மசோதா: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அமலாகும் வாய்ப்பு

நாடாளுமன்ற மாநிலங்களவையின் நிலுவையில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரில் அமலாகும் வாய்ப்பு உள்ளது. மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த மசோதாவை அனைத்துக் கட்சிகளும் ஆதரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மசோதா மக்களவையில் கடந்த வருடம் ஆகஸ்டில் நிறைவேற்றப்பட்டது. இதை மாநிலங்களவையிலும் நிறைவேற்ற கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் அன்றாடம் முயற்சிக்கப்பட்டது.  ஆனால், மாநிலங்களவையில் தொடர்ந்து நிலவிய அமளியால் அந்த மசோதா விவாதத்திற்கும் எடுக்க முடியவில்லை. இதனால், வரும் கூட்டத்தொடரில் மத்திய அரசு அதை எப்படியும் நிறைவேற்ற முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

வரும் ஜனவரி 31-ல் தொடங்கி பிப்ரவரி 13 வரை என நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதில், மத்திய அரசின் நிலுவையில் உள்ள பெரும்பாலான மசோதாக்களை நிறைவேற்ற முயற்சிக்கப்படும்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இங்கு நடைபெறும் தேர்தல்களில் வாக்குரிமை பெறும் மசோதா இது. இதன்மூலம், அவர்கள் தங்கள் சார்பில் இந்தியாவில் வாக்களிக்க ஒருவரை நியமிக்கலாம். இவர்களை ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றியும் அமர்த்தலாம்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒருமுறை இந்தியாவிற்கு வந்து தங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா விவரங்களை தம் தொகுதிகளில் பதிவு செய்ய வேண்டும். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒரு புள்ளிவிவரத்தின்படி, வெளிநாடுகளில் சுமார் 3.10 கோடி இந்தியர்கள் வாழ்கின்றனர். இத்துடன் இந்திய ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கான ஓட்டுரிமையிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்படி, ராணுவ வீரரின் வாக்கை அவரது மனைவி தேர்தலில் பதிவு செய்யலாம். ஆனால், பெண் ராணுவ வீரர்களின் கணவருக்கு இதைப் பதிவு செய்யும் உரிமை கிடையாது.

இந்தச் சட்டத்தின் வரம்பில், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளும் உள்ளனர். எனவே, இந்த மசோதாவில் தற்போது பாலின சமத்துவ மாற்றம் செய்யப்பட உள்ளது.  இந்த இரண்டு மசோதாக்களும் மக்களவைத் தேர்தலில் முக்கியமானவை என்பதால் அவை அமலாகும் வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு நம்புகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x