Published : 13 Dec 2018 08:54 PM
Last Updated : 13 Dec 2018 08:54 PM
ம.பி.யில் ஆட்சி அமைக்கத் தேவையான தனி மெஜாரிட்டி எண்ணிக்கை 116 பாஜக, காங்கிரஸ் இருவருக்கும் கிடைக்கவில்லை. இதற்காக நடைபெறும் என அஞ்சப்பட்ட குதிரை பேரம், மக்களவைத் தேர்தலில் பாதிப்பை உண்டாக்கும் என்பதால் கைவிடப்பட்டதாகக் கருதப்படுகிறது.
ம.பி. சட்டப்பேரவையின் 230 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில், காங்கிரஸ் 114, பாஜக 109, பகுஜன் சமாஜ் 2, சமாஜ்வாதி மற்றும் கோண்டுவானா கன் தந்திரக் கட்சி தலா ஒன்று பெற்றிருந்தன. சுயேச்சைகளுக்கும் மூன்று தொகுதிகளில் வெற்றி கிடைத்திருந்தது.
இந்த முடிவுகளில் ஆட்சி அமைக்க கிடைக்க வேண்டிய தனிமெஜாரிட்டியான 116 எவருக்கும் கிடைக்கவில்லை. காங்கிரஸுக்கு இரண்டு மற்றும் பாஜகவிற்கு ஏழு தொகுதிகளும் குறைவாக இருந்தன.
இதனால், பாஜகவின் முன்னாள் மாநில அமைச்சர் மிஸ்ரா, பாஜகவும் ஆட்சி அமைக்க முயற்சிக்கும் என நேற்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். காங்கிரஸும் மாயாவதி மற்றும் அகிலேஷ்சிங் யாதவிடம் தானாக சென்று ஆதரவு கேட்காமல் இருந்தது.
இதனால், ம.பி.யில் குதிரை பேரம் நிகழும் அச்சம் எழுந்தது. இதன் மீதான செய்தி நேற்று ‘இந்து தமிழ் திசை’ இணையத்திலும் வெளியாகி இருந்தது. இதனிடையே, மாயாவதி மற்றும் அகிலேஷ் தம் ஆதரவை காங்கிரஸுக்கு தர முன் வந்தனர்.
அதேசமயம், அடுத்த ஆறு மாதங்களில் மக்களவை தேர்தல் வருவதை முன்னிட்டு குதிரைப்பேரம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் தம் கட்சிகளுக்கு களங்கம் ஏற்பட்டால் அது மக்களவை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என காங்கிரஸ், பாஜக இருவருமே அதை கைவிட்டதாகக் கருதப்படுகிறது.
இதேபோன்ற நிலை இதற்கு முன் நிகழ்ந்த கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலிலும் ஏற்பட்டது. அதிலும் குதிரைப்பேரம் ஏற்படும் ஆபத்து கிளம்பியது. அங்கு காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஆதரவளித்தமையால் அங்கு மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அமைத்தது.
ம.பி.யில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்த பாஜகவின் முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் நான்காவது முறைக்காக நூலிழையில் வாய்ப்பை இழந்துள்ளார். இவரது கட்சியான பாஜகவிற்கு 7 தொகுதிகளில் வெற்றி பெற 4,337 வாக்குகள் பற்றாக்குறை இருந்தது நினைவுகூரத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT