Published : 18 Jan 2019 02:53 PM
Last Updated : 18 Jan 2019 02:53 PM
ஒற்றுமையையும் நம்பிக்கையையும் தேசத்துக்கு உணர்த்தவுள்ள பொதுக்கூட்டத்தை ஒருங்கிணைக்கும் மம்தா பானர்ஜிக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன் என கடிதம் எழுதியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவின் வரலாற்று சிறப்பு மிக்க ‘பிரிகேட் பரேட்’ மைதானத்தில் நாளை பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் சரத்பவார், தேவகவுடா, சந்திரபாபு நாயுடு, மாயாவதி, அகிலேஷ் சிங் யாதவ், பரூக் அப்துல்லா, அர்விந்த் கேஜ்ரிவால், மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி பிரசாத் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இவர்களுடன் அருணாச்சலப் பிரதேசத்தில் 5 முறை முதல்வராக இருந்த ஜிகாங் அபாங், முன்னாள் பாஜக அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, அருண்ஷோரி ஆகியோரும் மேடையேறுகின்றனர்.
இந்நிலையில், ராகுல் காந்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "இந்தியா முழுவதும் சக்திவாய்ந்த அமைப்புகள் எழுச்சி கண்டுள்ளன. மோடி அரசின் போலி வாக்குறுதிகளாலும் பொய்களாலும் வஞ்சிக்கப்பட்ட லட்சோப லட்ச இந்தியர்களின் கோபத்தாலும், ஏமாற்றத்தாலும் இந்த சக்திகள் எழுச்சி கண்டிருக்கின்றன.
இந்த சக்தி நாளை என்ற புதிய நம்பிக்கையால் உந்தப்பட்டுள்ளது. இந்த தேசத்தின் ஒவ்வொரு ஆணின் குரலும், பெண்ணின் குரலும், குழந்தையின் குரலும் செவி சாய்க்கப்பட்டு மதிக்கப்படும் நாளைய இந்தியாவின் நம்பிக்கையால் இந்த சக்தி உந்தப்பட்டிருக்கிறது. மதம், பொருளாதாரம், அந்தஸ்து, பிராந்தியம் என்ற எந்தப் பிரிவினையும் இல்லாத நாளைய இந்தியா என்ற கருத்தால் இந்த சக்தி உந்தப்பட்டிருக்கிறது.
ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் திரளக் காரணம், உண்மையான தேசியவாதமும் வளர்ச்சியும் ஜனநாயகத்தின் சோதனைகளைத் தாங்கிய தூண்களால்தான் நிலைநிறுத்தப்படும் என்ற நம்பிக்கையே.
ஜனநாயகம், சமூக நீதி, மதச்சார்பின்மை போன்ற கொள்கைகள் பாஜக மற்றும் மோடியால் சிதைக்கப்பட்டு வருகிறது.
தேசத்தின் கொள்கைகளை முன்னிறுத்துவதில் எப்போதுமே முன்னணியில் நிற்கும் வங்காள மக்களை வரலாறு கொண்டாடுவதைப் போல் நாமும் வாழ்த்துகிறோம்.
மம்தாவுக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன். ஒற்றுமையையும் நம்பிக்கையையும் பிரகடனப்படுத்தும் இந்த ஒன்றுகூடல் வாயிலாக ஒன்றுபட்ட இந்தியா என்ற சக்திவாய்ந்த செய்தியை அனுப்புவோம்" என்று கூறியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT