Last Updated : 19 Jan, 2019 11:36 AM

 

Published : 19 Jan 2019 11:36 AM
Last Updated : 19 Jan 2019 11:36 AM

ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம்; காங்கிரஸ், மஜதவுக்கு கவலை வேண்டாம்: எடியூரப்பா

கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகள் கவலை கொள்ளவேண்டாம் என கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.

சனிக்கிழமை காலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாகவே சுயேட்சைகளின் ஆதரவு வாபஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மூவரின் மும்பைப் பயணம், பாஜக எம்.எல்.ஏ.,க்களின் சொகுசு விடுதி தங்கல் என அரசியல் பரபரப்புக்கு சற்றும் பஞ்சமில்லாமல் நிகழ்வுகள் அரங்கேறின. இதனால் குமாரசாமி ஆட்சி தப்புமா என்ற சூழல் உருவானது. 224 உறுப்பினர்கள் பலம் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலம் 113. 

ஆளும் மஜத - காங்கிரஸ் கூட்டணியின் பங்கு முறையே 37 - 80 என்ற அளவில் உள்ளது. இது தவிர சில சுயேட்சைகளின் ஆதரவு இருக்கிறது.

இந்நிலையில் மும்பை சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை பாஜக தன்வசம் இழுக்க முயன்றதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால், பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறி குதிரை பேரக் குற்றச்சாட்டை முன்வைத்தன. ஆனால்,முதல்வர் குமாரசாமியோ எந்த பயமும் இல்லை என பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், டெல்லி அருகே குருகிராமில் முகாமிட்டிருந்த பாஜக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் கர்நாடகா திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார் எடியூரப்பா.

இது தொடர்பாக அவர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "எங்களது எம்.எல்.ஏ.,க்கள் டெல்லியில் இருந்து பெங்களூரு வருகின்றனர். நாங்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வோம். வறட்சி நிலவரத்தை ஆய்வு செய்வோம். எந்த ஒரு சூழலிலுல் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்க மாட்டோம். ஆதலால் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிகள் எந்தவிதக் கவலையும் கொள்ளத் தேவையில்லை" எனக் கூறியிருக்கிறார்.

இந்த சூழலில் கர்நாடக அரசியல் பரபரப்புக்கு இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x