Last Updated : 29 Jan, 2019 11:32 AM

 

Published : 29 Jan 2019 11:32 AM
Last Updated : 29 Jan 2019 11:32 AM

ராகுல் காந்தியை விட பிரியங்கா வருகையால் காங்கிரஸுக்குப் பலன் அதிகம்: தேவகவுடா பேட்டி

பிரியங்கா வருகையால் காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் கூடுதல் பலன் கிடைக்கும் என முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான தேவகவுடா கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி வதேராவை நியமித்துள்ளார் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி. கடந்த சில ஆண்டுகளாகத் தொண்டர்களால் முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கை ஏற்கப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் கட்சிப் பணிகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் பொறுப்பு பிரியங்காவுக்குத் தரப்பட்டது.

இந்நிலையில் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்த தேவகவுடா பாஜகவுக்கு எதிராக திரளும் எதிர்க்கட்சிகள் வலுவான எதிரணியாக இருக்க என்ன செய்ய வேண்டும், பிரியங்கா வருகையால் காங்கிரஸுக்கான பலன் என்ன?, மாநிலக் கட்சிகளின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பன குறித்து விவரித்துள்ளார்.

மெகா கூட்டணிக்கு வித்திட்ட தேவகவுடா:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு எதிராக வலுவான சமிக்ஞையை அனுப்புவதற்காக எதிர்க்கட்சிகளை ஒரே தளத்தில் திரட்டும் பணியை முதலில் தொடங்கியவர் தேவகவுடாதான் என்றால் அது மிகையாகாது.

8 மாதங்களுக்கு முன்னதாக, கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்றபோது இதற்கான அடித்தளத்தை அவர் அமைத்தார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தலைமையிலான முன்னணியால் மட்டுமே வலுவான அரசாங்கத்தைத் தர இயலும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்க வேண்டும். ஆனால், இதற்கு பிராந்தியக் கட்சிகளும் கள நிலவரத்தை உணர்ந்து சில தியாகங்களைச் செய்ய வேண்டும் என ஆலோசனை கூறுகிறார் தேவகவுடா.

பேட்டியின் தொகுப்பு பின்வருமாறு:

பிரியங்கா காந்தியின் வருகை வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அனுகூலமாக அமையுமா?

நிச்சயமாக. ராகுல் காந்தியை விட பிரியங்கா காந்தி சிறப்பாகச் செயல்படுவார் என நான் நம்புகிறேன். பொதுமக்கள் மத்தியில் அவரது தோற்றம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். பிரியங்காவுக்கு அவரது பாட்டி இந்திரா காந்தியின் சில சாயல்கள் உள்ளன. இது காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் ஆதாயம் தேடித் தரும். பிரியங்காவால் காங்கிரஸ் பலன் அடைந்தால் நான் தான் அதில் மிகுந்த மகிழ்ச்சியடையும் நபராக இருப்பேன்.

எதிர்க்கட்சிகளின் ஒன்றுகூடல் முயற்சியை பிரதமர் மோடி சந்தர்ப்பவாத கூட்டணி, நகைப்புக்குரிய கூட்டணி என்றெல்லாம் விமர்சிக்கிறார். வலுவான அல்லது வலுவற்ற அரசாங்கத்துக்கும் இடையேயான தேர்வு என்றும் கூறுகிறார். இது குறித்து உங்கள் கருத்து?

மெகா கூட்டணியானது அதன் பிரச்சினைகளைப் புரிந்து அதற்கு தீர்வு காண இயலவில்லை என்றால் பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு நாம் எதிர்வினையாற்றவே தேவையில்லை. நாட்டு மக்கள் நிலையான அரசாங்கம் அமையவே விரும்புகின்றனர். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் வேற்றுமைகளைக் கலைந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சி நல்லாட்சி தருவது எப்படி என்பதில் கவனத்தை குவிக்க வேண்டும்.

மதச்சார்பற்ற ஜனநாயகக் கோட்பாடுகளைக் காப்பதற்காக ஒன்றிணைந்துள்ள பிராந்தியக் கட்சிகள் திறந்த மனதுடன் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியுடன் ஒருங்கிணைந்து சென்றால்தான் இந்த இலக்கை எட்ட முடியும் என்பதைப் புரிந்துகொள்வது நல்லது. ஆனால், பிராந்தியக் கட்சிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையேயான பூசல் மெகா கூட்டணி ஏற்பாடுகளை மோடி விமர்சிக்க வழிவகை செய்துள்ளது. மோடி ஏற்கெனவே நாட்டின் மதச்சாப்பாற்ற தன்மையைச் சிதைத்துவிட்டார். அரசியலமைப்பு நிறுவனங்களையும் சிதைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், மாநிலக் கட்சிகள் காங்கிரஸுடன் இணைந்து செல்ல வேண்டும்.

எதிர்க்கட்சிகளுக்குள் வேற்றுமை பிறக்க எது தூண்டுதலாக இருந்தது என நினைக்கிறீர்கள்?

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி 10 தொகுதிகளைக் கோரினார். காங்கிரஸ் அதை பரிசீலித்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி ம.பி.யில் இரண்டு தொகுதிகளிலும் ராஜஸ்தானில் 6 தொகுதிகளிலும் வென்றது. இது, உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கைகோக்க வழிவகை செய்தது. காங்கிரஸ் அங்கு தனித்துப் போட்டியிடப் போகிறது.

இதை நான் தோல்வியாகக் கருதவில்லை. ஆனால், இது நிச்சயமாக மோடிக்கு ஒரு துணிச்சலைத் தந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சி ஒரு படுதோல்வி பரிசோதனை என்ற எண்ணத்தை அவருக்கு ஊட்டியிருக்கிறது.

கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்றபோது எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒரே தளத்தில் திரண்டபோது உடைந்துபோன மோடியின் நம்பிக்கை இப்போது எதிர்க்கட்சிகள் மத்தியில் உருவாகியுள்ள கருத்து பேதங்களால் மீண்டும் உயிர்ப்பெற்றிருக்கிறது.

இப்போதுகூட இதைச் சரிசெய்துவிடலாம் என நம்புகிறீர்களா? சரி செய்ய வாய்ப்பு இருக்கிறதா?

நிச்சயமாக. ஆனால், காங்கிரஸ் அதற்கு மனம் கொள்ள வேண்டும். இந்த ஒருங்கிணைப்பு பாஜகவுக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் என்று உணர வேண்டும். நாடு முழுவதும் மாநிலக் கட்சிகளுடன் இணைந்து பாஜகவுக்கு எதிரான பேரணிகளை காங்கிரஸ் ஒருங்கிணைத்திருக்க வேண்டும். இதை மட்டும் காங்கிரஸ் செய்திருந்தால் இந்நேரத்துக்குள் பாஜகவுக்கு எதிரான வலுவான மெகா கூட்டணி உருவாகியிருக்கும். ஆனால், பெங்களூருவில் நடந்த பேரணிக்குப் பின் 8 மாதங்களாகியும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடவில்லை.

பிரதமர் பதவிக்கான மெகா கூட்டணியின் தேர்வு யார் என்பதை அறிய பாஜக விரும்புகிறதே?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அதற்கான இயற்கையான தேர்வு. பிரதமர் பதவிக்கு நாங்கள் யாரும் போட்டியிட விரும்பவில்லை. அதனால்தான் சொல்கிறேன் காங்கிரஸால் மட்டுமே நாட்டு மக்களுக்கு வலுவான எதிரணிக்கான காட்சியை தேசத்துக்குக் காட்ட இயலும்.

- தமிழில் பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x