Last Updated : 01 Jan, 2019 07:09 PM

 

Published : 01 Jan 2019 07:09 PM
Last Updated : 01 Jan 2019 07:09 PM

உ.பி.யில் 5 நாட்களில் 78 பசுமாடுகள் இறப்பு: ரூ.2.5 லட்சம் அரசுநிதி பெற்றும் தீனி வழங்காமையால் பரிதாபம்

உ.பி.யின் அலிகரில் கடந்த வாரம் 5 நாட்களில் 78 பசுமாடுகள் பரிதாபமாக இறந்துள்ளன. கோசாலைகளில் இவற்றை காக்கக் கிடைத்த அரசு நிதி ரூ.2.5 லட்சம் பெற்றும் தீனி வழங்காமையால் இந்த பரிதாபம் நேர்ந்துள்ளது.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அலிகர் மாவட்ட ஆட்சியரான இந்து பூஷண் சிங் கூறும்போது, ‘‘பயிர்களை மேய்வதாக விவசாயிகளால் அரசு கட்டிடங்களில் அடைத்து வைக்கப்பட்ட பசுமாடுகள் மீட்டு இங்கு சமூகசேவகர்களின் கோசாலைகளில் விடப்பட்டன. இதன் பராமரிப்பிற்காக அரசின் நிதி ரூ.2.5 லட்சம் அளித்தும் பலனில்லாமல் உள்ளது’’ எனத் தெரிவித்தார்.

உ.பி.யின் மதுராவின் கிராமத்து அரசு பள்ளிக்கூடம் ஒன்றில் 150 பசுமாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இதில் ஆறு மாடுகள் கடந்த டிசம்பர் 24-ல் உணவில்லாமல் பலியாகி உள்ளன. இதுபோல், தம் பயிர்களை உண்டு பிழைத்து வந்த பசுமாடுகளுக்கு உ.பி விவசாயிகள் இடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இதனால், அவற்றை விவசாயிகளே பிடித்து பள்ளி மற்றும் அரசு கட்டிடங்களில் அடைப்பது அதிகமாகி வருகிறது. அவற்றுக்கு தீனிகள் வழங்கப்படாமையால் பல பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழப்பதும் அதிகமாகி உள்ளது.

பந்தேல்கண்டில் புதிய பிரச்சினை

உ.பி.யின் வறட்சிப் பிரதேசமான பந்தேல்கண்டில் பசுமாடுகளால் ஒரு புதிய பிரச்சினை நிலவுகிறது. இந்தவகை பசுமாடுகளால் இருமாவட்ட எல்லைகளில் வாழும் விவசாயிகளுக்கு இடையேயும் மோதல் ஏற்பட்டு வருகின்றன.

தனது பகுதியில் உள்ள மாடுகளை விவசாயிகள் இரவுநேரங்களில் அருகிலுள்ள மாவட்ட எல்லைகளில் விரட்டி விடுகின்றனர். இதேபோல், அருகாமையில் உள்ளவர்கள் அதை திருப்பி அனுப்புவதாலும் பிரச்சனைகள் எழுந்து வருகின்றன.

உபியில் மாடுகளை விட எருமைகளே விவசாயத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பால்தருவதை நிறுத்தும் பசுமாடுகள் அநாதையாக வீதிகளில் விடப்படுகின்றன. இவ்வாறு அனாதையாக விடப்படும் பசுமாடுகளுக்கு போதுமான உணவு மற்றும் பாதுகாப்பு கிடைப்பதில்லை.

இதனால், பசுமாடுகள் பரிதாபமாக பலியாகும் செய்திகள் சமீப நாட்களாக அதிகமாக வெளியாகி வருகின்றன. கோசாலைகள் எனும் பெயரில் நில ஆக்கிரமிப்பும், அரசு நிதியும் தவறாகப் பயன்படுத்துவதுமே இதற்கு காரணம் எனப் புகார் நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x