Published : 20 Jan 2019 08:23 AM
Last Updated : 20 Jan 2019 08:23 AM
திருப்பதி ஏழுமலையான் கோயி லுக்குள் நேற்று மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 3 வாலிபர்கள், அத்துமீறி நுழைந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால், மலையடிவாரம் முதற்கொண்டு மலைப்பாதை, திருமலையில் உள்ள முக்கிய இடங்கள், 4 மாட வீதிகள் மற்றும் கோயிலுக்குள் என திருமலை முழுவதும் தற்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போலீ ஸார், தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள், ஆக்டோபஸ் கமாண்டோ படையினர் என தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வாகனங்களில் வருவோரையும், மலையேறி வருவோரையும், தேவஸ்தான கண்காணிப்பு பிரிவினர் சோதித்த பின்னரே கோயிலுக்குள் அனுப்பி வைக் கின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சுப்ரபாத சேவைக்கு செல்லும் பக்தர்களில், 3 பேர் மட்டும் அனைத்து சோதனைகளையும் சாமர்த்தியமாக கடந்து கோயிலுக்குள் அத்துமீறி செல்ல முயன்றனர். பின்னர், கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை பார்த்த அதிகாரிகள், அந்த 3 பேரில் ஒருவரை கோயில் வாசலிலும் மற்ற இருவரை, வெள்ளி வாசல் அருகிலும் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, இவர்கள் 3 பேரும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் எப்படி சுப்ரபாத சேவை டிக்கெட் இல்லாமல் வெள்ளி வாசல் வரை சென்றனர்? கண்காணிப்பு ஊழியர்கள் எப்படி இவர்களை டிக்கெட் இல்லாமல் உள்ளே அனுமதித்தனர்? கலாச்சார உடையாக வேட்டி, சட்டை கட்டாயமென்றாலும், பேண்ட், சட்டை அணிந்து இவர்களால் எப்படி இவ்வளவு தூரம் செல்ல முடிந்தது ? இவர்களை தேவஸ்தான ஊழியர்கள் யாராவது பணம் பெற்றுக்கொண்டு உள்ளே விட்டனரா என்ற கோணங்களில் தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துமீறி 3 பேர் உள்ளே நுழைந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பொங்கல் பண்டிகையை யொட்டி, தொடர் விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் நேற்றும் பக்தர்கள் கூட்டம் திருமலையில் அலைமோதியது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பி, கோயிலுக்கு வெளியே நாராயணகிரி பகுதி வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். இதனால் சுவாமியை தரிசிக்க நேற்று 14 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர். சர்வ தரிசனம், திவ்ய தரிசனம் டோக்கன் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT