Published : 24 Jan 2019 10:59 AM
Last Updated : 24 Jan 2019 10:59 AM
ஜார்க்கண்ட் மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி உருவாக்கி வருகின்றனர். மக்களவையுடன், அம்மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்த்து இக்கூட்டணி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக ஆளும் ஜார்க்ண்டில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து வருகின்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்), ஜார்க்ண்ட் விகாஸ் மோர்ச்சா(ஜேவிஎம்), லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவை காங்கிரஸ் தலைமையில் இணைந்துள்ளன. இங்கு மொத்தம் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கீடு முடியும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரத்தினர் கூறும்போது, ‘‘காங்கிரஸ் 6, ஜேஎம்எம் 4, ஜேவிஎம் 2, ஆர்ஜேடி மற்றும் சிபிஐ தலா ஒரு தொகுதிகளில் போட்டியிட முடிவாகி உள்ளது. அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலின் முதல் அமைச்சர் வேட்பாளராக ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் முன்னிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படும்’’ எனத் தெரிவித்தனர்.
முன்னாள் முதல் அமைச்சர் சிபு சோரனின் மகனான ஹேமந்தும் முதல்வராக பதவி வகித்தவர். ஜேவிஎம் தலைவரான பாபுலால் மராண்டி, பிஹாரில் இருந்து
2001-ல் ஜார்க்ண்ட் பிரிந்த போது பாஜக சார்பில் முதலாவது முதல்வராகப் பதவி வகித்தவர். கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 12 எம்பிக்கள் கிடைத்தனர். மீதம் உள்ள இரண்டும் ஜேஎம்எம் கட்சிக்கு போனது. ஜேஎம்எம் உடன் கூட்டணி வைத்து 9 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு ஒன்று கூட கிடைக்கவில்லை. எனினும், கடந்த மாதம் நடைபெற்ற கோலேபேரா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை தோற்கடித்து காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜேஎம்எம் கட்சி ஆதரவுடன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மக்களவைக்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, மகாராஷ்டிரா, பிஹாருக்கு பின் மூன்றாவது மாநிலமாக ஜார்க்ண்டில் முடிவாகி உள்ளது. முக்கிய மாநிலமான உ.பி.யில் மாயாவதியும், அகிலேஷ்சிங் யாதவும் அமைத்த கூட்டணியில் காங்கிரஸ் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT