Published : 15 Jan 2019 01:40 PM
Last Updated : 15 Jan 2019 01:40 PM
பிஹாரின் பாட்னா சாஹேப் மக்களவைத் தொகுதியில் 2009 முதல் பாஜக எம்.பி.யாக இருப்பவர் பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா. இவர் அக்கட்சியில் இருந்து விலகி வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வென்ற சத்ருகன் சின்ஹாவின் வயதைக் காரணம் காட்டி அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. அப்போது முதல் பாஜகவிற்கு எதிராகவே சத்ருகன் சின்ஹா பேசி வருகிறார்.
இவரை பாஜகவும் கட்சியில் இருந்து நீக்காமல் ஏனோ விட்டு வைத்தது. அவரிடம் மீண்டும் பாஜகவில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு சத்ருகன் சின்ஹா, ''நான் பாஜகவில் மீண்டும் போட்டியிடுவேனா? எனக் கேளுங்கள்'' எனப் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் சத்ருகனுக்கு மீண்டும் பாட்னா சாஹேப்பில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தொகுதி, பிஹாரின் லாலு பிரசாத் யாதவுடனான மெகா கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பாட்னா சாஹேப் தொகுதியில் உயர் சமூகத்தவர்கள் அதிகம் உள்ளனர். தற்போது மத்திய அரசு அவர்களுக்கு அளித்துள்ள பொருளாதார ரீதியிலான ஒதுக்கீட்டை லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் எதிர்த்தது. ஆனால், காங்கிரஸ் எதிர்க்காமல் ஆதரித்து வாக்களித்திருந்தது. இதனால், காங்கிரஸ் வேட்பாளராக சத்ருகன் சின்ஹா போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கருதப்படுகிறது.
என்ன செய்வார் யஷ்வந்த்?
சத்ருகன் சின்ஹாவைப் போல், முன்னாள் மத்திய நிதி அமைச்சரான யஷ்வந்த் சின்ஹாவிற்கு அமைச்சரவையில் பாஜக மீண்டும் இடமளிக்கவில்லை. இதனால், தன் கட்சிக்கு எதிராகப் பேசிவந்த யவஷ்வந்த், சமீபத்தில் பாஜகவில் விலகி விட்டார்.
அதன் பிறகு இந்த இரண்டு சின்ஹாக்களும் ஒன்றிணைந்து பல கூட்டங்களில் கலந்து கொண்டு வருகின்றனர். இதில் சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் பக்கம் சாயும் நிலையில் யஷ்வந்த் என்ன செய்வார் எனும் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT