Last Updated : 03 Jan, 2019 08:15 AM

 

Published : 03 Jan 2019 08:15 AM
Last Updated : 03 Jan 2019 08:15 AM

மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு இல்லாததால் உ.பி.யின் பாஜக எம்.பி.க்கள் சமாஜ்வாதியில் சேர முயற்சி

உ.பி.யின் பாஜக எம்பிக்கள் பலருக்கும் மக்களவை தேர்த லில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது எனத் தெரியவந் துள்ளது. இதனால், சுமார் 12 எம்பிக்கள் சமாஜ்வாதி கட்சியில் சேர முயன்று வருகின்றனர்.

உ.பி.யில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் பாஜக 73 இடங்களைப் பெற்றது. இதற்கு அதன் சார்பில் பிரதமராக முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடி அலை காரணமாகக் கருதப்பட்டது. இதே மோடி அலையின் காரணமாக கடந்த 2017-ல் நடைபெற்ற உ.பி. சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக தனிமெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த சூழலில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றத்தால் கடந்த மாதம் முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக தனது ஆட்சியை பறிகொடுத்தது. இந்த நிலை மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கும் என அச்சம் எழுந்துள்ளதால், அதன் வேட்பாளர் தேர்வில் பாஜக பல மாற்றங்கள் செய்யும் என அதன் உ.பி. எம்பிக்கள் நம்புகின்றனர். ஏற்கெனவே உள்ள பாஜக எம்.பி.க்களில் பலருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படாது எனத் தெரிகிறது.

இதனால், சுமார் 12 எம்.பி.க்கள் கட்சி மாறி சமாஜ்வாதியில் இணைந்து மீண்டும் போட்டியிட திட்டமிடுகின்றனர். இந்த நிபந்தனைகளுடன் அவர்கள் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் சிங் யாதவையும் ரகசியமாக சந்தித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் சமாஜ்வாதியின் உபி நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘துமரியாகன்ச்சின் எம்பியான ஜெகதாம்பிகா பால், அலகாபாத்தின் ஷியாம்சரண் குப்தா உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்டவர்கள் எங்கள் கட்சியில் இணைய விரும்புகின்றனர். தாம் வென்ற தொகுதிகளில் மீண்டும் போட்டியிட விரும்புகின்றனர். இவர்களால் சமாஜ்வாதிக்கு லாபம் கிடைக்குமா என அகிலேஷ் தமது நிர்வாகிகளுடன் ஆராய்ந்து வருகிறார்’ எனத் தெரிவித்தன.

இவர்களில் ஜெகதாம்பிகா பால் உ.பி. மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர். 2009-ல் முதன்முறையாக அவர் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014-ல் காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பளிக்க மறுத்தமையால் பாஜகவில் இணைந்தார். இவரைபோல், ஷியாம் சரணும் சமாஜ்வாதியின் எம்பியாக 2004-ல் இருந்தவர். இவர்கள் இருவர் மூலமாக மேலும் பல பா.ஜ.க. எம்பிக்கள் சமாஜ்வாதியில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், சமாஜ்வாதியால் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் கோரிக்கை பகுஜன் சமாஜுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு முடிந்த பின்பே முடிவு தெரியும் எனக் கருதப்படுகிறது.

கடந்த மாதம் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் தினத்திற்கு ஒருநாள் முன்னதாக பாஜகவில் இருந்து வெளியேறிய பைரைச் தொகுதி எம்பியான சாவித்ரிபாய் புலேவும், சமாஜ்வாதியில் சேர அணுகியுள்ளார். இவர், பாஜகவில் இருந்து வெளியேறுவதற்கு முந்தைய நாள் அகிலேஷைச் சந்தித்து இருந்தார். ஆனால், தாம் சமாஜ்வாதியில் சேரப் போவதில்லை என சாவித்ரிபாய் அறிவித்திருந்தார். இதற்கு அவர் பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதியுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருவது காரணம் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x