Published : 30 Jan 2019 09:11 AM
Last Updated : 30 Jan 2019 09:11 AM
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க நடிகர் ரஜினிகாந்த் விரும்பவில்லை எனக் கருதப்படுகிறது. இதனால் அதன் பிறகு வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கட்சியைத் தொடங்கிப் போட்டியிடுவதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அரசியலில் இறங்குவதாக அறிவித்தார் ரஜினிகாந்த். இதைத் தொடர்ந்து அவரது கட்சியுடன் கூட்டணி வைக்க பாஜக முயன்று வருகிறது. தமிழக தொடர்புகொண்ட பாஜக தலைவர்களில் சிலர் ரஜினியுடன் கூட்டணி வைப்பதற்காக அவரைச் சுற்றி வியூகம் அமைத்து வருவதாகவும் கருதப்படுகிறது. ஆனால், பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பாத ரஜினி, சட்டப்பேரவை தேர்தலில் நேரடியாகப் போட்டியிட விரும்புகிறார்.
தமது திரைப்படங்களைப் போல் அரசியல் கட்சியிலும் நன்றாக யோசித்து மிகவும் நிதானமாகச் செயல்பட ரஜினி விரும்புவதாகவும் அவருக்கு நெருக்கமான டெல்லி வட்டாரங்கள் 'இந்து தமிழ் திசை' யிடம் தெரிவித்தன.
இது குறித்து 'இந்து தமிழ் திசை' நாளேட்டிடம் ரஜினிக்கு நெருக்கமான டெல்லி வட்டாரங்கள் கூறும்போது, ''ஒருவேளை இரண்டு தேர்தலும் ஒன்றாக வந்து விடும் என்பதற்காக, பெயர் தவிர கட்சி தொடங்குவதற்கான மனு தயாராக வைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் களம் இறங்கினால், தேசியக் கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணியும் மற்றொன்றுடன் மோதலும் சந்திக்க வேண்டி இருக்கும். இதை தவிர்க்க அவர் சட்டப்பேரவையை மட்டும் குறி வைத்துள்ளார். எக்காரணங்களைக் கொண்டும் தேசிய அரசியல் கட்சிகளைப் பகைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை'' எனத் தெரிவித்தனர்.
தனது கட்சி அறிவிப்பிற்குப் பின் ரஜினி, பாஜக தலைவர்களிடம் நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. 2016-ல் டெல்லியின் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த '2.0' படத்தின் படப்பிடிப்பு மார்ச் 7 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றது.
ஏப்ரல் 6-ல் பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் 83 வயது மனைவி கமலா காலமாகி இருந்தார். அவருக்கான அஞ்சலிக் கூட்டம் நேரு விளையாட்டரங்கு வளாகத்தில் ஒரு சிறிய அரங்கில் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜகவின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த தகவல் அங்கு படப்பிடிப்பில் இருந்த ரஜினிக்கு முன்கூட்டியே தெரியவந்தது.
இதனால், சரியாக அக்கூட்டத்திற்கு ஒருநாள் முன்னதாக படப்பிடிப்பை ரத்து செய்து சென்னை திரும்பி விட்டார் ரஜினி. பிறகு அடுத்த நாளே படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்திருந்தார். இதன் பின்னணியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அஞ்சலிக் கூட்டத்திற்காக ரஜினி அளித்த மதிப்பு எனவும் சொல்லப்பட்டது. ஆனால், அதன் உண்மைக் காரணம் பாஜக தலைவர்களுடனான சந்திப்பை தவிர்ப்பது என்கிறது டெல்லி வட்டாரம்.
இதேபோல், ரஜினி அறிவித்த தொலைக்காட்சி சேனலுக்கான அனுமதி பெறவும் இன்னும் மனு செய்யப்படவில்லை. அரசியல் கட்சியைப் போல், இதன் பூர்வாங்கப் பணிகளும் தயாராக உள்ளன. இதையும் மக்களவைத் தேர்தலுக்குப் பின்னரே தொடங்க ரஜினி திட்டமிட்டுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை அவரது டெல்லி நண்பர்கள் தயாராக வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் தேசியக் கட்சிகளுடன் அமைந்த கூட்டணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பழகிவிட்ட தமிழக மக்கள் இந்தமுறை அவ்வாறே வாக்களிக்கும் வாய்ப்புகள் உள்ளன. மக்களவையில் தாம் தனித்துப் போட்டியிடுவதால் அதிக பலன் கிடைக்காது எனவும் ரஜினி எண்ணுவதாக அந்த வட்டாரங்கள் கருத்து கூறுகின்றனர்.
இந்தமுறை புதிய கட்சி தொடங்கியுள்ள அவரது திரையுலக நண்பர் கமல்ஹாசனும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளார். இவருக்கு கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கையை தாம் கட்சி தொடங்கும் முன்பாகப் பார்க்க விரும்புகிறார் ரஜினி.
ஏனெனில், ஆந்திராவின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்ட போது ஏற்பட்ட நிலை ரஜினியும் அறிந்ததே. எனவே, யாருடனும் கூட்டணி வைக்காமல், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளை சட்டப்பேரவை தேர்தலில் நேரடியாக ரஜினி எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT