Published : 04 Jan 2019 08:29 AM
Last Updated : 04 Jan 2019 08:29 AM
கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டுக்கு அதிமுக மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா அளித்த சிறப்பு பேட்டி:நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாஜகவுடன் ரகசியமாக பேசி வைத்துக் கொண்டு அதிமுகவினர் இப்படிசெயல்படுவதாகக் கூறப்படுகிறதே?இது முற்றிலும் தவறான புகார். இந்த விவகாரத்தில் எங்களுக்கும் பாஜகவுக்கும் எந்தவிதமான ரகசிய உறவும் கிடையாது.
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது காவிரி பிரச்சினைக்காக கடைசி நாள் வரை குரல் கொடுத்து போராடி வந்தோம். இதுபோல், நடப்பு கூட்டத் தொடரிலும் மேகதாது விவகாரத்தில் எதிர்க்கிறோம். இதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் பல விஷயங்களில் அரசின்நிலைப்பாட்டுக்கு அதிமுக மறைமுகமாக ஆதரவளித்துள்ளதே?அப்படி இல்லை. மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம், மோட்டார் வாகனச் சட்டம், ஜிஎஸ்டி உட்பட பல விவகாரங்களில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. மத விவகாரத்தில் தலையிடுவதில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன?எந்த மத விவகாரத்திலும் தலையிடக் கூடாது என்பது எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நிலைப்பாடு. அந்த வழியில் செல்வதால்தான் முத்தலாக் தடை மசோதாவை எதிர்க்க வேண்டும் என முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் எனக்கு உத்தரவிட்டன்ர. அதன்படி நான் எதிர்த்து பேசினேன். ஆனால், முஸ்லிம்களின் ஷரீயத் சட்டத்தில் இதற்கு முன்பு காங்கிரஸும் தலையிட முயன்றது.
எந்த அடிப்படையில் காங்கிரஸ் மீது இந்தப் புகாரை கூறுகிறீர்கள்?1985-ல் ஷா பானு வழக்கில் ஜீவானாம்சம் வழங்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமப்படுத்த அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி சட்டம் கொண்டு வர முயன்றார். ஷரீயத்தில் தலையிட முயன்ற காங்கிரஸை தடுத்தது அதிமுக. முத்தலாக் தடை போல அப்போது ஜீவனாம்ச மசோதாவுக்கும் பெரும்பாலான முஸ்லிம்கள் கொந்தளித்தனர். காங்கிரஸ் செய்வது தவறு என எடுத்துரைக்க, அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர், முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் அப்துல் சமதுவை டெல்லிக்கு அழைத்து வந்தார். எம்ஜிஆர், எடுத்துரைத்ததால் தான் அந்த மசோதாவை ராஜீவ் காந்தி கைவிட்டார். இப்போது, மாநிலங்களவையில் தோல்வியுறும் என உறுதிசெய்த பின்பு தான் காங்கிரஸ் முத்தலாக் தடை மசோதாவில் தீவிரம் காட்டுகிறது. இந்த மசோதா, கடந்த வருடம் முதன்முறையாக தாக்கல் செய்யப்பட்ட போது அதை எதிர்ப்பதில் காங்கிரஸ் எந்த ஆர்வமும் காட்டவில்லை. இப்போது, மக்களவை தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளைக் கவரவே காங்கிரஸ் அதை எதிர்க்கிறது.
அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த திமுக, ராஜீவ் காந்தியின் ஷரீயத் தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நாடாளுமன்றத்தில் அமைதி காத்தது. இப்போதுகூட கூட்டணிக் கட்சி என்பதால் காங்கிரஸுடன் இணைந்து முத்தலாக் தடை மசோதாவை முஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவும் எதிர்க்கிறது.
2019-க்கான வியூகம் அமைப்பது குறித்து ஜெயலலிதா காட்டிய வழியில் தேர்தல் நேரத்தில் எங்கள் கட்சியின் தலைவர்கள் முடிவு எடுத்து அறிவிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT