Published : 08 Jan 2019 05:51 PM
Last Updated : 08 Jan 2019 05:51 PM
உ.பி.யின் பரேலியில் போலீஸாருடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டயில் இரண்டு கொள்ளைக்காரர்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அம்மாவட்ட ஐபிஎஸ் அதிகாரியான தமிழர் தலைமையில் நடந்ததைப் பாராட்டி ரூ.50,000 பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
பரேலியின் அனுப் அகர்வால் ஜுவல்லர்ஸின் பணியாளர்கள் மூவரிடம் கொஹதாபீட் பகுதியில் நேற்று முன்தினம் நண்பகலில் துப்பாக்கி முனையில் ரூ.15 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது. இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் இதில் ஒருவரைச் சுட்டதாகவும் புகார் செய்யப்பட்டது.
இந்த வழக்கைப் பதிவு செய்த விசாரித்த பரேலி போலீஸார் அடுத்த சில மணி நேரங்களில் கொள்ளைக்காரர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர். நள்ளிரவில் அவர்களை பரேலி மாவட்ட சிறப்பு காவல்துறை கண்காணிப்பாளர்(எஸ்எஸ்பி) ஜி.முனிராஜ் தலைமையில் ஒரு படை சுற்றி வளைத்தது. அப்போது, போலீஸார் மீது கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். இதில் இருந்து தப்பவேண்டி போலீஸார் திருப்பிச் சுட்டதில் இரண்டு கொள்ளைக்காரர்கள் துப்பாக்கி குண்டுகளுக்குப் பலியாகினர்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் தமிழரான முனிராஜ் ஐபிஎஸ் கூறும்போது, ''கொள்ளை பற்றிய தகவல் கிடைத்ததும் உடனடியாக பரேலியின் எல்லைகளை சீல் வைத்து வாகனங்களைச் சோதனையிட்டோம். இதனால், நகரினுள்ளே ஒளிந்திருந்தவர்கள் இடத்தை அடையாளம் கண்டு சுற்றி வளைத்தோம்'' எனத் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச் சண்டையில் பரேலியில் ஆய்வாளர் கீதேஷ் கபில் மற்றும் காவலர் பிரவீன் குமார் ஆகிய இருவர் மீதும் குண்டு பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இருவரது முழுவிவரம் இன்னும் தெரியவில்லை எனவும் முனிராஜ் தகவல் அளித்தார்.
கடந்த வருடம் செப்டம்பரில் மாவட்ட எஸ்எஸ்பியாக முனிராஜ் பொறுப்பேற்றது முதல் பெரிய அளவில் கொள்ளைகள் பரேலியில் நடக்கவில்லை. இதனால், நேற்று முன் தினம் நடைபெற்ற வழிப்பறி பரேலி போலீஸாருக்கு பெரிய சவாலாக இருந்தது.
ரூ.50,000 ரொக்கப் பரிசு
இவர்களை மிகக்குறுகிய நேரத்தில் பிடித்தமையால் முனிராஜ் தலைமையிலான படையினரை பாராட்டி ரூ.50,000 ரொக்கப் பரிசு மற்றும் டிஐஜி சார்பில் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது.
பரேலியின் சிங்கம்
இதற்கு முன் முஹர்ரம் பண்டிகையில் போது மதக்கலவரம் நிகழ்த்த முயன்றதாக பரேலியின் பாஜக எம்எல்ஏ மீது முனிராஜ் வழக்குப் பதிவு செய்தார். இதற்காக அவரை பொதுமக்கள், ‘பரேலியின் சிங்கம்’ எனக் குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டி பாராட்டி இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT