Last Updated : 09 Jan, 2019 11:56 AM

 

Published : 09 Jan 2019 11:56 AM
Last Updated : 09 Jan 2019 11:56 AM

தமிழகக் காவிரி டெல்டா நிலப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மற்றொரு இடத்திற்கான ஏல அறிவிப்பு

தமிழகத்தின் காவிரி டெல்டா நிலப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மற்றொரு இடத்திற்கான ஏல அறிவிப்பை நேற்று முன்தினம் மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சரான தர்மேந்தர பிரதான் டெல்லியில் வெளியிட்டார். கடந்த வருடம் விடப்பட்ட ஏலத்தின் இரண்டாம் பகுதியாக இது, ஓஏஎல்பி-2 எனும் பிரிவில் பெரிய நிலப்பகுதியாக அமைந்துள்ளது.

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் உள்ள ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஓஏஎல்பி-1(Open Acreage Licensing Programme)பிரிவு மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் (டிஜிஎச்) ஏலம் விட்டிருந்தது.

கடந்த அக்டோபரில் விடப்பட்டதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தமிழகத்தின் இரண்டு இடங்களைப் பெற்றன. இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

இதன் மீது மத்திய எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  'கடல்பகுதி' என்பதால் தமிழக மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என அந்த ஏலத்தின் போது கருத்து கூறியிருந்தார். இவ்விரு இடங்களில் பணி தொடங்க மத்திய, தமிழக அரசுகளிடம் பல்வேறு வகையான உரிமங்களைப் பெற வேதாந்தா மனு செய்துள்ளது.

இந்நிலையில், ஓஏஎல்பி-2 பிரிவில் நாடு முழுவதிலும் 14 பிளாக்குகளில் (வட்டாரம்) ஹைட்ரோ கார்பன் எடுக்க தற்போது டிஜிஎச் ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குஜராத், ஒடிசா, ஆந்திரா, அந்தமான், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளதில் தமிழகத்திலும் ஒரு நிலப்பகுதி இடம் பெற்றுள்ளது.

காவிரி டெல்டா பகுதியில் 474.19 சதுர கி.மீ. அளவில் அமைந்துள்ள இந்த இடம் குறிப்பாக எந்த மாவட்டத்தில் உள்ளது என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும். ஓஏஎல்பி-2 பிரிவின் ஏலத்தில் இடம்பெற வரும் மார்ச் 12 ஆம் தேதி வரை மனுக்களை டிஜிஎச் பெற்றுக்கொள்ளும்.

அதன்பிறகு மனு செய்த நிறுவனங்களில் அதிக தொகை குறிப்பிடும் நிறுவனத்திற்கு ஏலம் ஒதுக்கப்படும். இந்நிறுவனத்துடன் டிஜிஎச் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பொருட்கள் எடுக்க ஒப்பந்தம் இடும்.

திங்கள்கிழமை வெளியாகி உள்ள 14 பிளாக்குகளுக்கான அறிவிப்பில் நிலப்பகுதி 8, ஆழம் குறைந்த கடல் பகுதி 5 மற்றும் ஆழ்கடல் பகுதி 1-ம் அமைந்துள்ளன. இந்த திட்டங்களில் சுமார் 600 மில்லியன் டாலர் மதிப்புள்ள தொகை முதலீடு செய்யப்படும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

ஓஏஎல்பி பிரிவு என்பது, நெடுவாசலில் இருந்ததை விட ஏக்கர் அளவில் பலமடங்கு பெரிதானவை. தற்போது வேதாந்தா எடுத்துள்ள இரு இடங்கள், புதுச்சேரியின் காரைக்காலில் தொடங்கி தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகியவற்றின் ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் அமைந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x