Last Updated : 16 Jan, 2019 07:46 PM

 

Published : 16 Jan 2019 07:46 PM
Last Updated : 16 Jan 2019 07:46 PM

மெக்கன்சி சுவடிகள் மீது ஜவஹர்லால் பல்கலையில் பேராசிரியர் ம.ராஜேந்திரன் சொற்பொழிவு

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காலின் மெக்கன்சி சுவடிகள் குறித்த சொற்பொழிவு இன்று ஜனவரி 16 காலை நடைபெற்றது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தரான பேராசிரியர் ம. இராசேந்திரன் அவர்கள் காலின் மெக்கன்சி சுவடிகள் குறித்து சொற்பொழிவாற்றினார்.

 

சென்னை மாகாணத்திற்கு ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனிக்காக பணிபுரிய வந்தவர் ஸ்காட்லாந்து அதிகாரியான காலின் மெக்கன்சி. இவர்போல், ஆட்சியாளர்களாக வந்தவர்களில் ஆர்வலராக மாறியவர்கள் மிகவும் குறைவு எனக் கருதப்படுகிறது.

 

காலின் மெக்கன்சி ஆவணப்படுத்திய தகவல்கள் குறித்து பேராசியர்.ராசேந்திரன் கூறும்போது, ‘ஆற்றங்கரை ஏரிக்கரையில் தான் பாடல்பெற்ற தலங்கள் பெரும்பாலும் இருக்கின்றன. ஒரு காலத்தில் சந்தையாக விளங்கிய கோயில்கள் சார்ந்து பொருளாதாரம் வலுப்பெற்றது.

 

தொழில் செய்வோரே எண்ணையும் எழுத்தையும் கற்க வேண்டிய தேவை இருந்தது. பின்னாளில், தனிமனிதனுக்கான பொருளாதாரத் தேவை உருவானபோது, எண்ணும் எழுத்தும் எல்லாரும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிவிட்டது.

 

அறிவாளர்கள், மதகுருமார்கள், வியாபாரிகள், ஆட்சியாளர்கள் எனும் வரிசையிலான வருகையில் தான் நிலப்பகுதியையும் அதுசார் மக்களையும் தன்வயப்படுத்துகின்றனர், இதற்கு சான்றாக உலகமயமாக்கலுக்கு முன்னான போப்பின் உலகநாடுகள் பயணத்தை கணக்கில் கொள்ளமுடியும்.

 

காலின் மெக்கன்சி சுவடிகளில், தென்னிந்தியாவின் சமயம், செவிவழி வரலாறு, உள்நாட்டு வணிகம், ஊர்களின் பெயர்க் காரணம், கல்வெட்டுச் சான்றாதாரங்கள் அறியமுடிகின்றது.

 

மீன் வகைகள், அவற்றைப் பிடிக்க பயன்படுத்தப்பட்ட வலைகள், பிடிக்கும் முறைகள் கூட ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.’ எனத் தெரிவித்தார்.

 

மெக்கன்சியின் சுவடிகள் வழி அறியலாகும் பல அரிய தகவல்களை எடுத்துரைத்த பேராசியர் ம.இராசேந்திரன் அதன் பின்னணி குறித்த விளக்கத்துடன் தன் உரையை நிறைவு செய்தார். இந்திய மொழிகள் மையத்தின் தமிழ்மொழிப் பிரிவின் சார்பில் நடைபெற்ற இந்த சொற்பொழிவில் ஜேஎன்யுவின் பல பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

 

இதில், தமிழ்ப் பேராசிரியர் இரா.அறவேந்தன், கர்நாடக மொழிப் பேராசிரியர் புருஷோத்தம பிளிமலே, பிரெஞ்சு துறைப் பேராசிரியர் அஜித் கண்ணா , தில்லிப் பல்கலைக்கழக தமிழ்மொழிப் பேராசிரியர் உமாதேவி மற்றும் தமிழ் மொழி ஆய்வாளர்கள், பிற துறை ஆய்வாளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x