Published : 19 Jan 2019 04:16 PM
Last Updated : 19 Jan 2019 04:16 PM
இந்திய அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த பிராந்திய, தேசியக் கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் 19 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இந்திய அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று இந்த மாநாட்டின் வாயிலாக நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். பாஜகவினர் அவர்களது கார்ப்பரேட் நண்பர்களுக்கு உதவுவதிலேயே கவனத்தில் உள்ளனர். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்தார்களே? அந்த வாக்குறுதி என்னவானது?
தேசம் ஆழ்ந்த நெருக்கடியில் இருக்கிறது. குடிமக்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ளனர். அரசியல் ரீதியாத சுதந்திர அமைப்புகள் கைகட்டப்பட்டு கிடக்கின்றன. இந்திய அரசியலமைப்பை நிலைகுலையச் செய்யும் சக்திகளை நாம் தோற்கடிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபடும்வரை மோடியும், அமித் ஷாவும் ஜனநாயகத்தையும் மதச்சார்பற்ற பண்புகளையும் சிதைத்துக் கொண்டே இருப்பார்கள். இந்திய அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்" என்றார்.
சோனியா அனுப்பிய தகவல்..
கொல்கத்தா மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அனுப்பிய செய்தியையும் மல்லிகார்ஜுன கார்கே கூட்டத்தில் தெரிவித்தார்.
"வரவிருக்கும் பொதுத் தேர்தல் நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் எதிர்கொள்ளப்படும். இன்று நடைபெற்ற இந்த மாநாடு மிகவும் முக்கியமானது. கர்வம் கொண்ட மோடி அரசை எதிர்த்துப் போராட நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களை இது ஒருங்கிணைத்திருக்கிறது. எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என சோனியாவின் செய்தியையும் கார்கே வாசித்துக் காட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT