Published : 18 Jan 2019 03:46 PM
Last Updated : 18 Jan 2019 03:46 PM
புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன் தினம் இரவு இரட்டை கொலை நடைபெற்றது. இதை கண்ணால் பார்த்தும் கொலையாளிகளை தடுக்காமல் காலனிவாசிகள் செல்போனில் படம் எடுத்தது தெரியவந்துள்ளது.
மேற்கு டெல்லி மாவட்டத்தின் கைலா பகுதியில் உள்ளது டிடிஏ அடுக்கு மாடி வீடுகளின் காலனி. இதில் ஒன்றை உபியின் ஹாத்தரஸை சேர்ந்த வீரு(42), சுனிதா(35) தம் நான்கு குழந்தைகளுடன், வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
இந்நிலையில், பக்கத்து வீட்டுவாசியான முகம்மது ஆசாத்(42) என்பவர் வீரூவின் மூத்த மகளான குஷ்புவிடம்(20) தவறான நோக்கத்தில் அணுக முயன்றுள்ளார். இதை சம்பவம் நடந்த அன்று வீரூவின் குடும்பத்தார் ஆசாத்திடம் தட்டிக் கேட்டுள்ளனர்.
இதனால், கோபம் கொண்ட ஆசாத் தன் வீட்டில் இருந்த கத்தியால் சுனிதாவை குத்தியுள்ளார். இதை தடுக்க வந்த வீரு மற்றும் அவரது மகனான ஆகாஷையும்(16) குத்தி விட்டார். இதில், வீரு, சுனிதா அதே இடத்தில் பலியாகி விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆகாஷ் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கிருந்து தப்பிய ஆசாத், டெல்லி போலீஸாரால் தேடிப் பிடிகப்பட்டு நேற்று இரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணையில் ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. இதில், ஆசாத்துடன் வாய்த்தகராறாக துவங்கும் போதே அங்கு காலனிவாசிகள் கூடி விட்டனர். ஆனால், ஆசாத்தின் செயலை காலனிவாசிகள் தடுக்காததுடன் தன் கைப்பேசிகளில் படம் எடுத்திருப்பது வெளியாகி உள்ளது.
இவர்களில் எவரும் போலீஸுக்கும் போன் செய்து புகார் அளிக்கவும் முன்வரவில்லை. இந்த புகாரை குஷ்புவே போன் செய்து அளித்துள்ளார். தான் எடுத்த படங்களையும் போலீஸிடம் அளிக்க காலனிவாசிகள் முன்வரவில்லை.
கடந்த இரண்டு வருடங்களாக குஷ்புவிற்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார் ஆசாத். இவரது செயலை ஆசாத்தின் மனைவியும் கண்டித்து வந்துள்ளார். ஆசாத் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT