Last Updated : 25 Jan, 2019 12:53 PM

 

Published : 25 Jan 2019 12:53 PM
Last Updated : 25 Jan 2019 12:53 PM

‘பிரியங்கா காந்தி அழகாக இருப்பதால் மட்டும் வாக்குகள் பெற்றுவிட முடியாது’: பிஹார் அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

பிரியாங்கா காந்தி வதேரா அழகாக இருப்பதால் மட்டும் வாக்குகளை வென்றுவிட முடியாது என்று பிஹார் மாநில அமைச்சர் ஒருவர் சர்ச்சையாகப் பேசியுள்ளார்.

நேரடி அரசியலில் ஒதுங்கி இருந்த பிரியங்கா காந்தி வதேரா காங்கிரஸ் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டு உ.பி. மாநில கிழக்கு பிராந்தியபொறுப்பாளராக நியிக்கப்பட்டார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்த முயற்சியையும், பிரியங்கா காந்தியின் வருகையையும் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் வரவேற்றுள்ளனர். புத்துணர்ச்சியும் பெற்றுள்ளனர்.

பிப்ரவரி முதல்வாரத்தில் இருந்து பிரியங்கா காந்தி முறைப்படி உ.பி. கிழக்கு பிராந்திய பொறுப்பாளர் பதவியை ஏற்க உள்ளார். பிரியங்கா காந்தி வருகை காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது என்று அந்தக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

பிரியங்கா காந்தியின் வருகை பாஜகவுக்குள் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்று காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், ராகுல் காந்தி தோல்வி அடைந்துவிட்டதால், பிரியங்கா காந்தி அரசியலுக்கு வந்துள்ளார் என்று பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிஹார் மாநிலத்தின் அமைச்சராக இருக்கும் வினோத் நாராயண் ஜா பிரியங்கா காந்தி வதேராவை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்துள்ளார்.

அவர் ஏஎன்ஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ பிரியங்கா காந்தி மிகவும் அழகானவர். அழகான முகத்தை வைத்திருந்தால், மட்டும் வாக்குகளை வென்றுவிட முடியாது. அதுமட்டுமல்லாமல் ஊழலில் சிக்கிய ராபர்ட் வதேராவின் மனைவி பிரியங்கா காந்தி. ராபர்ட் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பிரியங்கா அழகாக இருந்தாலும், அரசியல்ரீதியாக சாதிக்கவும் இல்லை, அரசியல் அறிவும் இல்லை “ எனத் தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், பாஜகவும் இணைந்து ஆட்சியில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x