Published : 14 Jan 2019 02:27 PM
Last Updated : 14 Jan 2019 02:27 PM
"பாஜகவுக்கு வாக்களிக்கக் கோரி பாடிய பாடலுக்காக நான் பெற்ற ஊதியத்தைத் திருப்பி அளித்துவிடுகிறேன். ஆனால் நீங்கள் என் பாடல் மூலம் பெற்ற வாக்குகளை திரும்பித் தாருங்கள்" என்று அசாம் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பாடகர் ஜூபின் கார்க்.
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் நாடுகளிலிருந்து 31, டிசம்பர் 2014-க்கு முன் இந்தியாவுக்குள் வந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மைப் பிரிவினருக்கு குடியுரிமைத் தகுதி வழங்குகிறதுது குடியுரிமைச் சட்டம். இதனை எதிர்த்து அசாம், திரிபுரா மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், அசாம் மாநில பிரபல பாடகரான ஜூபின் கார்க் இந்த சட்டத்துக்குத் தொடர்ந்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார். இது தொடர்பாக அண்மையில் அவர் அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவலுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்துக்கு இதுவரை பதில் ஏதும் வராததால் தனது ஃபேஸ்புக் பக்கத்தின் வாயிலாக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர், "நான் தங்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், நீங்கள் அதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை. அந்த அளவுக்கு நீங்கள் பரப்பாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
ஒருவகையில் உங்களுக்குக் காட்டப்படும் கருப்புக் கொடிகளை எண்ணுவதற்கே உங்களுக்கு நேரம் இல்லை என்பதையும் அறிவேன்.
நான் எழுதிய கடிதத்தில் குடியுரிமை சட்ட மசோதாவை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தக் கோரினேன். ஆனால் நீங்கள் எவ்வித நடடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சட்டப்பேரவைத் தேர்தலின் போது பாஜகவுக்காக நான் பாடிய பாடல்களுக்கு நீங்கள் கொடுத்த ஊதியத்தைத் திருப்பி செலுத்திவிடுகிறேன்.
அதேபோல் நீங்களும் எனது பாடல் வாயிலாக பெற்ற வாக்குகளைத் திரும்பித் தந்துவிடுங்கள்"
இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT