Published : 28 Jan 2019 04:21 PM
Last Updated : 28 Jan 2019 04:21 PM
பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) ஒரு தீவிரவாத அமைப்பு என பிரகாஷ் அம்பேத்கர் கருத்து கூறியுள்ளார். பாரத ரத்னா பாபா சாஹேப் அம்பேத்கரின் பேரான இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் பரிப்பா பகுஜன் மஹாசங் (பிபிஎம்) எனும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார்.
ஐதராபாத் தொகுதி எம்.பி.யான அசாதுதீன் ஒவைஸியின் அகில இந்திய மஜ்லீஸ் எ இத்தஹாதுல் முஸ்லிமின் கட்சியுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். மும்பையின் புறநகரான கல்யாண் பகுதியில் நடந்த தம் கட்சிக் கூட்டத்தில் பிரகாஷ் அம்பேத்கர் நேற்று பேசினார்.
இதில் அம்பேத்கர் கூறும்போது, ''ஆர்எஸ்எஸ் ஒரு தீவிரவாத அமைப்பு. தேசியவாதம் குறித்து தொடர்ந்து பேசுபவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. முடிந்தால் என்னிடம் வந்து அவர்கள் விளக்கத்தைக் கூறும்படி தெரிவித்தேன்'' எனக் கூறினார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தம்முடன் ஆயுதங்களை வைப்பதாகவும் குற்றம் சாட்டியவர், அவர்களின் வீடுகளைச் சோதனையிட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். போலீஸ் மற்றும் ராணுவம் என நம் நாட்டில் இருக்கும் போது ஆர்எஸ்எஸ் ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன எனவும் பிரகாஷ் அம்பேத்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பிரகாஷ் அம்பேத்கர் மேலும் கூறுகையில், ''ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் வீடுகளில் சோதனையிட வேண்டும் என நான் மாநிலப் போலீஸாரிடம் கோரிக்கை வைக்கிறேன். அப்போது அவர்கள் வீடுகளில் பயங்கர ஆயுதங்கள் கிடைக்கும்'' எனத் தெரிவித்தார்.
இந்த அமைப்பினர் சுதந்திரம் எனும் பெயரில் பொதுமக்களை சாதி அடிப்படையில் பிரிக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். தம் கட்சியினரை தோல்வியுறச் செய்ய எதிர்க்கட்சிகள் இல்லை என ஆர்எஸ்எஸ் கருதுவதாகவும் பிரகாஷ் அம்பேத்கர் கருத்து தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT