Published : 14 Jan 2019 08:54 AM
Last Updated : 14 Jan 2019 08:54 AM

மத்திய அரசு பரிந்துரையை நிராகரித்தார் நீதிபதி சிக்ரி: காமென்வெல்த் தீர்ப்பாய தலைவராக மறுப்பு

காமென்வெல்த் தீர்ப்பாயத்தின் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரியை மத்திய அரசு பரிந்துரைத்த நிலையில், அந்த பதிவியை ஏற்க சிக்ரி மறுத்துவிட்டார்.

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவர் ஏ.கே.சிக்ரி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் இடம் பெற்றுள்ளார். சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை அப்பதவியில் இருந்து மாற்றுவதற்காகச் சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலை தேர்வுக்குழுவில் இவரும் இடம் பெற்றார். அதில், வர்மாவை இடமாற்றம் செய்ய சம்மதம் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து காமென்வெல்த் நடுவர் தீர்ப்பாயத் தலைவர் பதவிக்கு சிக்ரியை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது.

நீதிபதி சிக்ரி, வரும் மார்ச் 6-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரை அந்தப் பதவிக்கு பரிந்துரைக்கக் கடந்த மாதம் முடிவு மேற்கொள்ளப்பட்டதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், காமென்வெல்த் தீர்ப்பாயத்தின் தலைவர் பதவிக்கு சிக்ரி பெயரை பரிந்துரை செய்ய மத்திய அரசு கேட்ட நிலையில் அதற்கு சிக்ரி சம்மதம் தெரிவித்திருந்தார்.

அலோக் வர்மா நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிரதமர் தலைமையிலான குழுவில் சிக்ரி இடம் பெற்றதற்கும், தீர்ப்பாயத்தின் தலைவராக மத்திய அரசு பரிந்துரைத்தற்கும் தொடர்புப் படுத்தி பல்வேறு ஊகங்கள் வெளியானதால் அந்தப் பதவியை ஏற்க இயலாது என்று சிக்ரி தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “ கடந்த ஆண்டு டிசம்பர் முதல்வாரத்தில்தான் நீதிபதி சிக்ரியிடம் மத்திய அரசு வாய்மொழியாகச் சம்மதம் கேட்டது. அதற்கு நீதிபதியும் சம்மதம் தெரிவித்திருந்ததால், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இப்போது, திடீரென அந்த சம்மதத்தை திரும்பப் பெறுவதாக நீதிபதி சிக்ரி தெரிவித்துள்ளார்” எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த காமென்வெல்த் தீர்ப்பாயத் தலைவர் பதவி என்பது ஊதியம் இல்லாத பதவியாகும், ஆண்டுக்கு 2 அல்லது 3 முறை மட்டும் செல்ல வேண்டியது இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x