Last Updated : 11 Jan, 2019 08:44 AM

 

Published : 11 Jan 2019 08:44 AM
Last Updated : 11 Jan 2019 08:44 AM

உத்தரபிரதேச மாநிலத்தில் 15-ம் தேதி மாயாவதி, அகிலேஷ் பிரச்சாரம் தொடக்கம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் வரும் 15-ம் தேதியன்று பிரச்சாரத்தை தொடங்கவுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த பகுஜன் சமாஜும், சமாஜ்வாதியும் மக்களவை தேர்தலுக்காக கைகோத்துள்ளன. காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் அமைக்கும் மெகா கூட்டணியில் இந்த இரு கட்சிகளும் சேர மறுத்து வருகின்றன.

இந்த இரு கட்சிகளும் இணைந்து, உ.பி.யின் 80 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடவுள்ளன. இந்தக் கூட்டணியில், அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம்(ஆர்எல்டி) சேர்வது உறுதியாகியுள்ளது.

ஆனால், காங்கிரஸுக்கு இரண்டு தொகுதிகளை மட்டும் ஒதுக்குவதாக அகிலேஷும், மாயாவதியும் நிபந்தனை விதித்துள்ளனர்.

இந்நிலையில், ஜனவரி 15-ல் மாயாவதியின் 63 ஆவது பிறந்த நாள் வருகிறது. அதே தினத்தில், அகிலேஷின் மனைவியான டிம்பிள் யாதவின் 41-வது பிறந்த நாளும் வரவிருக்கிறது.

எனவே, இந்த நாளில் மாயாவதியும், அகிலேஷும் இணைந்து மாபெரும் பிரச் சாரக் கூட்டத்தை லக்னோவில் நடத்தவுள்ளனர். இதில், மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கான தொகுதிகளை அறிவிப்பதுடன் பிரச்சாரமும் துவக்கி வைக்கப்பட உள்ளது.

இந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள பகுஜன் சமாஜின் ஆதரவுக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியின் தலைவர் அஜீத் ஜோகி, மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடகா முதல்வருமான குமாரசாமி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுமா என்பது இன்னும் முடிவாகாமல் உள்ளது. 2009 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு உ.பி.யில் 22 எம்.பி.க்கள் கிடைத்தனர். அதனால், அக்கட்சி தனித்து போட்டியிடவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x