Published : 14 Jan 2019 02:57 PM
Last Updated : 14 Jan 2019 02:57 PM
உத்தரப் பிரதேசத்தில் கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் குடியிருப்பு வளாகத்தில் இன்று முற்பகல் (திங்கள் கிழமை) தீ விபத்து ஏற்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் நாளை கும்பமேளா திருவிழா தொடங்க உள்ளது. இது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தியாவின் மாபெரும் விழாவாகும்.
கும்பமேளா திருவிழா நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள திகம்பர் அகதா பகுதியில் விழாவுக்கு வருகை தருவோர் தங்குவதற்கு குடியிருப்பு அமைக்கப்பட்டது. இக்குடியிருப்புப் பகுதியில்தான் இந்தத் தீவிபத்து ஏற்பட்டது.
இவ்விழாவுக்கு பேரழிவு மேலாண்மையின் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ரிஷி சஹாய் இதுகுறித்து ஏஎன்ஐயிடம் பேசுகையில், ‘‘குடிசை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததில் இத் தீவிபத்து ஏற்பட்டது. இவ்விபத்து மதியம் 12.45க்கு ஏற்பட்டது.
தீவிபத்து ஏற்பட்ட உடன் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக 10 ஆம்புலன்ஸ் வண்டிகளும் 1 ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸும் வரவழைக்கப்பட்டன. இதில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை.
தீயணைப்பு வீரர்களின் உடனடி சேவையினால் பெரிய அளவில் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் இரு வாகனங்களும் சில பொருட்களும் சேதமடைந்தன.'' என்றார்.
பிரயாக்ராஜ் நகரின் பாதுகாப்பு அதிகாரி ஆஷூதோஷ் மிஸ்ரா கூறுகையில் ‘‘தீ பரவிய இடங்களில் அனைத்தும் தீ அணைக்கப்பட்டுவிட்டது’’ என்றார்.
நாளை தொடங்கும் இவ்விழாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT