Published : 05 Jan 2019 04:46 PM
Last Updated : 05 Jan 2019 04:46 PM
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தப்பிஓடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் தொழிலதிபர் விஜய் மல்லையா தப்பிஓடிய பொருளாதார குற்றவாளியாகச் சிறப்பு நீதிமன்றத்தால் இன்று அறிவிக்கப்பட்டார்.
தப்பிஓடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் முதல் குற்றவாளியாக விஜய் மல்லையா அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டத்தின்படி விஜய் மல்லையாவின் சொத்துக்கள் அனைத்தையும் மத்திய அரசு பறிமுதல் செய்ய முடியும். அதற்கான பூர்வாங்க பணிகளையும் தொடங்கலாம்.
மதுபான ஆலை உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி அளவுக்குக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி தப்பி ஓடினார்.
மல்லையா மீது மும்பை அமலாக்கப்பிரிவு நீதிமன்றம், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றின் வழக்கு தொடர்பட்டு, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ஜாமின் இல்லாத கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. பலமுறை ஆஜர்ஆகக்கோரி நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகவில்லை.
இதையடுத்து, அவரைக் கைது செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு முடுக்கிவிட்டது. இதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி விஜய் மல்லையாவை, ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கைது செய்து வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். ஆனால், அடுத்த சில மணிநேரங்களில் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ், யுனைடெட் பிரீவெரிஸ் நிறுவனத்தின் பங்குகளை மாற்றிய வகையில், விஜய் மல்லையா மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2016, நவம்பர் 19, 2017, ஜூலை 5 ஆகிய தேதிகளில் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் மல்லையா ஆஜராகவில்லை.
இதற்கிடையே தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதற்கிடையே லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், மல்லையாவை நாடுகடத்தலாம் என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு, ஜூலை 22-ம் தேதி, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவினர் தாக்கல் செய்த மனுவில், விஜய் மல்லையாவ தப்பிஓடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக் கோரி இருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், தொழிலதிபர் விஜய் மல்லையாவை புதிய சட்டமான தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்படி, தப்பிஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார். அவரின் ரூ.12, 500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மத்திய அரசு பறிமுதல் செய்யலாம் என உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் பூர்வாங்க பணிகளை அரசு மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT