Published : 09 Jan 2019 08:35 AM
Last Updated : 09 Jan 2019 08:35 AM
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில்பாஜகவை வீழ்த்த டெல்லியில் தம்மிடம் இருந்த ஆட்சியை பறித்த ஆம் ஆத்மி கட்சியுடனும் கூட்டணி வைக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கடந்த மாதம் நடந்த எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது.
இதையடுத்து, இரண்டு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை மறைமுகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, இக்கூட்டணி அமையும்பட்சத்தில், டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 4-இல்காங்கிரஸும், 3-இல் ஆம் ஆத்மியும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்தால் டெல்லியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது சிரமம் என அக்கட்சியின் டெல்லி தலைவர்கள் கருதுகின்றனர்.
இந்த காரணமாகவே, டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் தன் பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் பஞ்சாபிலும் ஆம் ஆத்மி முக்கிய எதிர்கட்சியாக வளர்ந்து விட்டதால், அம்மாநிலக் காங்கிரஸ் தலைவர்களும் இந்தக் கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாகவே, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று முன்தினம் சந்தித்து ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க எதிரிப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் கூறியதாவது: மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மூலமாக இந்த கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது. ஆம் ஆத்மியுடன் சேர்வதால் டெல்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட சில மாநிலங்களில் காங்கிரஸுக்கு பலன் கிடைக்கும். இந்த கூட்டணிக்கு வரும் எதிர்ப்பை சமாளிக்கும் முயற்சியில் ராகுல் இறங்கியுள்ளார் என அவர்கள் தெரிவித்தனர். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி கட்சியிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனை காரணமாக கூறியே, ஆம் ஆத்மி மூத்த தலைவர் எச்.எஸ்.புல்கா, அக்கட்சியில் இருந்து கடந்த வாரம் ராஜினாமா செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT