Published : 21 Sep 2014 10:24 AM
Last Updated : 21 Sep 2014 10:24 AM
பிஹாரின் சிவான் மாவட்டம், தித்ரா கிராமப் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் நூர் நவாப் அன்சாரி. தித்ரா கிராம சந்தைப் பகுதியில் சில மாதங்களுக்கு முன் கோவிந்த்குமார் என்ற 10 வயது சிறுவன் அழுது கொண்டிருந்தான். அச்சிறுவன் 5 ஆண்டுகளுக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறியதால் அவனுக்கு தனது பெற்றோர் மற்றும் கிராமத்தின் (பேசார் பாத்தி) பெயரைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.
இந்நிலையில் கோவிந்தை அவரின் வீட்டில் சேர்க்கும் பொருட்டு, அப்பகுதி சமூக சேவகர் அசோக் குமாரின் உதவியுடன் நூர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார்.கடைசியில் இணைய தளத்தின் உதவியால் கோவிந்தின் ஊரை கண்டுபிடித்து, கடந்த வாரம் அச்சிறுவன் அவனது தாய் ஜுமாரி தேவியிடம் ஒப்படைக் கப்பட்டான்.
இது குறித்து ‘தி இந்து’விடம் நூர் கூறும்போது, “பேசார்பாத்தி கிராமத்தை கூகுள் வரைபடத்தில் தேடியபோது, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஆகிய மாநிலங்களில் அந்தப் பெயரில் கிராமங்களை காட்டியது. அங்கு என் கணவர் நவாப் அன்சாரி, சமூக சேவகர் அசோக் குமார் ஆகிய இருவரும் சென்று விசாரித்தபோது கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அந்தப் பெயரிலான காவல் நிலையங்களை தேடியபோது அது, பிஹாரின் கிஷண்கன்ச் மாவட்டத்திலேயே 2009-ல் ஒரு புகார் பதிவானது கிடைத்தது. பிறகு அங்கு கோவிந்த்குமாரின் போட்டோவை அனுப்பி உறுதி செய்தோம்” என்றார்.
பேசார்பாத்தி இன்ஸ்பெக்டர் விஜய்குமார், சிறுவனின் தாயை சிவானுக்கு அனுப்பிவைக்க, அவரிடம் கோவிந்த்குமார் ஒப்படைக்கப்பட்டான்.
பஞ்சாயத்து தலைவர்களுக்கு இணையதள வசதியுடன் கூடிய மொபைல் போன் தரப்பட்டது, பிரிந்த தாயையும் மகனையும் ஒன்றுசேர்க்க உதவியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT