Last Updated : 08 Jan, 2019 10:30 AM

 

Published : 08 Jan 2019 10:30 AM
Last Updated : 08 Jan 2019 10:30 AM

கோயில் விழாவில் கொடுக்கப்பட்ட உணவுப் பொட்டலத்தில் சரக்கு பாட்டில்: சிக்கலில் பாஜக எம்எல்ஏ

உத்தரப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ நிதின் அகர்வால் தலைமையில் நடைபெற்ற கோயில் நிகழ்ச்சி ஒன்றில் விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொட்டலத்தில் மது பாட்டில் இருந்தது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஹர்தோய் மாவட்டத்திலுள்ள ஷ்ரவண தேவி கோயிலில் பாஸி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில், நிதின் அகர்வாலின் தந்தை நரேஷ் அகர்வாலும் இருந்தார். இவர் அண்மையில்தான் சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

இவர்தான் பாஸி சம்மேளனம் சார்பில் இந்தக் கோயிலில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சி முடியும் தருவாயில் நிதின் அகர்வால் விழாவுக்கு வந்திருப்பர்களுக்கு உணவுப் பொட்டலம் தயாராக இருக்கிறது. அனைவரும் சென்று பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தார். மேலும், பொட்டலங்களைப் பெற்று கிராமவாசிகள் அனைவருக்கும் விநியோகிக்குமாறும் கூறினார்.

அதன்படியே அங்கே சென்ற மக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டது. அதில், பூரி, சப்ஜி, இனிப்பு உடன் ஒரு மது பாட்டில் இருந்தது. நிகழ்ச்சியில் சிறுவர்கள்கூட கலந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட பொட்டலத்திலும் இதே பொருட்கள் இருந்தன.

இதை யாரோ வீடியோ எடுக்க இது தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஹர்தோய் தொகுதி பாஜக எம்எல்ஏ அன்சூல் வர்மா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, "இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். இது தொடர்பாக மாநிலத் தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்படும். இவ்வளவு அதிகமான அளவில் மது பாட்டில்கள் ஓரிடத்தில் விநியோகம் செய்யப்படுவது எப்படி கலால் துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் போனது என்பது குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்படும்" என்றார்.

எனினும் இந்தச் சம்பவம் குறித்து நரேஷ் அகர்வாலும் அவரது மகன் நிதின் அகர்வாலும் மவுனம் காத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x