Published : 02 Jan 2019 11:00 AM
Last Updated : 02 Jan 2019 11:00 AM
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரு பெண்கள் இன்று அதிகாலை போலீஸார் பாதுகாப்புடன் தரிசனம் செய்ததையடுத்து, புனிதப்படுத்தும் பணி இருப்பதாகக் கூறி கோயில் சன்னிதானம் அடைக்கப்பட்டு பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால், சபரிமலையில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு போடப்பட்டு, போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் அமல்படுத்தப்பட்டிருக்கும் தடை உத்தரவை ஜனவரி 5-ம் தேதி வரை கேரள அரசு நீட்டித்துள்ளது.
இந்நிலையில், 21 நாள் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பலத்த பாதுகாப்புக்கு இடையே கடந்த 30-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. கோயிலில் மகர விளக்கு பூஜை வரும் ஜனவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. ஜனவரி 20-ம் தேதி கோயில் நடை சாத்தப்படுகிறது.
இந்த சூழலில் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் இன்று அதிகாலை சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இவர்கள் இருவரும் ஏற்கெனவே கடந்த மாதம் 24-ம் தேதி சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். ஆனால், பிந்து, கனகதுர்காவுக்கு 40 வயதே ஆனதால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் இருவரும் கீழே இறக்கப்பட்டனர்.
சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் பெண்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர் என்ற தகவலை கேரள முதல்வர் பினராயி விஜயனும் உறுதி செய்துள்ளார்.
இதற்கிடையே கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்துவின் வீட்டுக்கும், மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா வீட்டுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிந்துவின் கணவர் ஹரிஹரன், மற்றும் 7 வயது மகள் ஆகியோர் வீட்டைப் பூட்டி வெளியே சென்றுவிட்டனர். சபரிமலைக்குச் சென்று திரும்பிய பிந்து, கனகதுர்கா ஆகியோரைப் பாதுகாப்பான இடத்தில் போலீஸார் தங்கவைத்துள்ளனர்.
இந்நிலையில், சபரிமலையில் பாரம்பரியமாக 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்லத் தடை இருக்கும் நிலையில், அதை மீறி பெண்கள் வந்து தரிசனம் செய்து திரும்பியதால், பாரம்பரிய மீறல் நடந்துள்ளதாக தலைமைத் தந்திரி கண்டரரூ ராஜீவரு தெரிவித்துள்ளார்.
கோயிலுக்குள் இரு இளம் பெண்கள் நுழைந்து சாமி தரிசனம் செய்ததால், கோயிலின் புனித்தன்மை கெட்டுவிட்டதாகவும் கோயின் நடையை அடைக்கவும் தந்திரி ராஜீவரு உத்தரவிட்டுள்ளார். பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர் இதையடுத்து, கோயிலில் சுத்தி கலசம் பூஜை நடந்து, புனிதப்படுத்தப்பட்டபின், கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என்று மலையாள செய்தித் தொலைக்காட்சிகள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT