Published : 29 Jan 2019 02:17 PM
Last Updated : 29 Jan 2019 02:17 PM
உங்களது நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்காதீர் என்று பெற்றோர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார்.
பரிக்ஷா பே சர்ச்சா 2.0 என்ற தலைப்பில் தேர்வெழுதும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். டெல்லி தட்கோடோரா மைதானத்தில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவர்களுடன் ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டைப் போல் அல்லாமல் இந்த ஆண்டு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாணவர்களுக்குள் போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களும் அவர்களது பெற்றோரும் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
நிறைவேறாத ஆசைகளை தாக்காதீர்..
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறன் இருக்கும். அதனைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது. அதை விடுத்து தங்களது நிறைவேறாத ஆசைகளை எல்லாம் பெற்றோர் பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது.
பிள்ளைகளின் தேர்வு மதிப்பெண் அட்டையை பெற்றோர்கள் தங்களது பெருமையைப் பறைசாற்றும் அடையாளமாக பயன்படுத்தமாட்டார்கள் என நான் நம்புகிறேன். ஏனெனில், அதுதான் பெற்றோரின் இலக்காக இருக்குமென்றால் பிள்ளைகள் போலி பிம்பங்களாகிவிடுவர்" என்றார்.
தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துங்கள்..
குழந்தைகள் மீது தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக பெற்றோர் ஒருவர் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மோடி, "மாணவர்கள் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ளவே கூடாது என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், தொழில்நுட்பம் அவர்களது மதி நுட்பத்தை விரிவாக்கம் செய்வதாக இருத்தல் வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் அவர்களுடைய புத்தாக்கச் சிந்தனைகளை வளர்க்க வேண்டும்" என்றார்.
இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று அர்த்தமாகாது
தேர்வு நேரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தைக் கடப்பதற்காகவே இந்தக் கலந்துரையாடல் என்பதால் தேர்வு முடிவுகள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.
"தேர்வுகள் வாழ்க்கையில் முக்கியமானதுதான். ஆனால், அதன் அழுத்தத்தை மனதில் ஏற்றாதீர். இப்போது இல்லை என்றால் எப்போதுமே இல்லை என்று அர்த்தமில்லை. இது மட்டுமே உங்களது கொள்கையாக இருக்க வேண்டும்.
தேர்வை எழுதுவதற்கு முன்னதாக ஒரே ஒரு கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் தேர்வு உங்கள் வாழ்க்கைக்கான தேர்வா? அல்லது 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு என்ற குறிப்பிட்ட வகுப்புக்கான தேர்வா என்பதை உங்களிடம் கேளுங்கள். இதற்கான விடை உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்" எனக் கூறினார்.
நேர மேலாண்மை முக்கியம்..
தொடர்ந்து பேசிய பிரதமர் நேர மேலாண்மை குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். "நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய நன்னெறி நேர மேலாண்மை. நமது நேரம் நம் கைகளில்தான் இருக்கிறது. நாம் தான் அதன் மீது ஆதிக்கம் செலுத்தும் முழு கட்டுப்பாட்டையும் கொண்டுள்ளோம். அந்த நேரத்தை வைத்து என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும். எல்லோருக்குமே 24 மணி நேரம்தான்.
ஆனால், அதைப் பயன்படுத்துபவரைப் பொறுத்து விளைவுகள் அமையும். ஒவ்வொரு நொடியையும் திட்டமிட்டு முன்னுரிமை அடிப்படையில் செலவழிக்க வேண்டும். நேர மேலாண்மை தெரிந்தவர்கள்தான் வாழ்க்கையை சுமுகமாகக் கடப்பார்கள். 10 பணிகளை நாம் முடிக்க வேண்டியதிருந்தால் அதில் முதன்மை முக்கியத்துவம் வாய்ந்த 7 பணிகள் என்னவென்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT