Published : 22 Jan 2019 07:46 AM
Last Updated : 22 Jan 2019 07:46 AM

உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு அளித்த பட்டியலால் சர்ச்சை: சபரிமலை சென்றுவந்த பெண்கள் சொல்வது என்ன?

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை நடைமுறைப்படுத்த கேரள அரசு தீவிரம் காட்டிய நிலையில் இதற்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. சபரிமலைக்கு இளம்வயது பெண்கள் செல்வதும், போராட்டத்தின் காரணமாக திரும்பி வருவதுமாக இருந்தது.

இந்நிலையில் கேரளத்தைச் சேர்ந்த பிந்து அம்மினி, கனகதுர்கா ஆகியோர் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜனவரி 2-ம் தேதி அதிகாலை 3.30-க்கு சபரிமலை ஐயப்பனை தரிசித்து திரும்பினர். இவர்கள் வீட்டு முன்பு பலரும் போராட்டங்கள் நடத்தியதால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கேட்டு இருபெண்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

அப்போது இவர்கள் மட்டுமல்ல சபரிமலையில் சீசன்காலம் முழுமைக்கும் சேர்த்து 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பிரிவில் 51 பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்ததாக கேரளஅரசின் சார்பில் குறிப்பு ஒன்று காட்டப்பட்டது. அது அறிக்கையாக தாக்கல் செய்யப்படவில்லை என்றாலும், திறந்த நீதிமன்றத்தில் பொதுவெளியில் முன்வைக்கப்பட்ட அந்த பட்டியல் வெளியிலும் கசிந்தது.

தமிழகத்தின் 24 பேர்கேரள அரசு நீதிமன்றத்தில் காட்டிய குறிப்புப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 24 பேரின் பெயர்கள் இருந்தன. ஆனால் இந்த பட்டியலின் உண்மைத்தன்மை தான் இப்போது விவாதத்தை கிளப்பியுள்ளது.

கேரள அரசு தரப்பு முன்வைத்த குறிப்பில் இடம் பெற்றிருந்த பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாமும் களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டோம். சோதனை முயற்சியாக சிலநபர்களிடம் நாம் இதுதொடர்பாக கேட்டபோது அவர்கள் சொன்ன பதில்கள் இனி அப்படியே…வேலூரைச் சேர்ந்த சாந்தி 48 வயது என கேரள அரசு குறிப்பிட்டு இருந்தது. சாந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.

போனை எடுத்த அவரது கணவர் நாகப்பன், ‘’சார் அவுங்க வருசா, வருஷம் போய்கிட்டு இருக்காங்க. அவுங்களுக்கு பேரன், பேத்திங்களே நாலுபேரு இருக்காங்க. அவுங்க படிக்காதவங்க. வயசு சொல்லத் தெரியாது. அங்க இருக்க அதிகாரிகளாச்சும் சரியா பார்க்கக்கூடாதா? என் வீட்டம்மாவுக்கு 55 வயசு தாண்டியாச்சு..”என்று அலுத்துக்கொண்டே இணைப்பைத் துண்டித்தார்.

வேலூரைச் சேர்ந்த மணி என்பவரது மனைவி மல்லிகா(48) பெயரும் அதில் இருந்தது. நாம் அந்த எண்ணுக்கு அழைத்தபோது அது ஆனந்தகுமார் என்பவருக்கு சென்றது. ‘’ யாருங்க அந்த மல்லிகா அவுங்க யாருன்னே எனக்குத் தெரியாது. யாரோ தவறாக என் நம்பரை கொடுத்துருக்காங்க” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

சென்னையை சேர்ந்த 48 வயது பெண் ஷீலாவும் தரிசித்திருப்பதாக பட்டியலில் உள்ளது. அதன்படி அவரையும் தொடர்புகொண்டோம். அலைபேசியை எடுத்த அவரது கணவர் வெங்கடேசன், “ஷீலாவுக்கு 52 வயதாகிறது. தரிசனத்துக்கு ஆன்லைனில் டிக்கெட் புக் செய்திருந்தோம். கம்ப்யூட்டர் சென்டரில் வயதை தவறாக போட்டுட்டாங்க.

அவருக்கு மட்டும் இல்லை, நாங்க மொத்தம் எட்டுபேர் போனோம். அதில் ஒருத்தருக்கு கூட சரியான வயசைப் பதிவு செய்யவில்லை. கோயிலுக்கு போறதுக்கு நாலுநாளுக்கு முன்னாடிதான் நான் இதைக் கவனிச்சுப்போய் கேட்டேன். அதனால் ஒன்னும் இல்லை. ஆதார்கார்டு எடுத்துட்டு போங்கன்னு அறிவுரை சொன்னாங்க.

நானும் ஆதார்கார்டு எடுத்துட்டு, மனைவி ஷீலாவையும் கூட்டிக்கிட்டு போனேன். கன்னிமூலகணபதி கோயிலில் வயதைப் பார்த்துவிட்டு சீல் அடிப்பார்கள். அப்போது வயதைப் பார்த்துட்டு 48 தான் ஆகுதான்னு கேட்டாங்க. நான் ஆதார்கார்டை காட்டி நடந்ததை சொன்னேன். அவுங்களும் சீல் அடிச்சுத் தந்தாங்க. தரிசனம் செஞ்சுட்டு வந்துட்டோம். இப்போ இப்படி ஒரு சிக்கலை சொல்றீங்களே?”என்கிறார் வெள்ளந்தியாக.

ஆதங்கப்படும் குருசாமி

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சீதா 45 வயதில் சபரிமலைக்கு வந்ததாக ஆவணங்கள் கூறும்நிலையில் அவரது அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோம். போனை எடுத்த குருசாமி ராஜா என்பவர், ‘’நான் தான் சீதாவை அழைத்து வந்தேன். கேரள அரசு, 18 வயசுன்னு கூட போடுவாங்க சார். 50 வயதுக்கு கீழுள்ள பெண்களை தமிழகத்தில் இருக்கும் எந்த குருசாமியும் கூட்டுட்டு போகமாட்டாங்க.

சீதாவுக்கு 53 வயசு ஆகுது. அவுங்க பேரனுக்கே இப்போ கல்யாண வயசு. ஆதார் கார்டில் வயது தவறாக உள்ளது. அதில் கூட 1973ல் பிறந்ததாக தான் போட்டுருக்கு. அப்படிப் பார்த்தாலும் 48 வயசுன்னாச்சும் போட்டுருக்கணும். அதிலும் வயசை குறைச்சுருக்காங்க. எங்க கலாச்சாரத்தை நாங்க ஒருபோதும் கெடுக்க மாட்டோம்” என்கிறார்.

வேலூர் மகாலெட்சுமி 49 வயதில் சபரிமலைக்கு சென்றதாக கேரள அரசு கூறுகிறது. அவரது அலைபேசியில் தொடர்பு கொண்டோம். அழைப்பை ஏற்ற அவரது மகன் சதீஷ், ‘‘அம்மா 49 வயதில் ஆதார் கார்டு எடுத்தார்கள். அதனால் ஆதார்கார்டில் 49 என போடப்பட்டுள்ளது. இப்போது அம்மாவுக்கு 52 வயது ஆகிறது”என்றார். வேலூரைச் சேர்ந்த கலா செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளார்.

சேலம் சரோஜா(48)வும் இந்த சீசனில் சபரிமலை சென்றிருப்பதாக அந்த பட்டியலில் இருக்கிறது. அதில் இருக்கும் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, ‘‘சத்தியமா ராங் நம்பர் சார்…”என்று சொல்கிறார். இதேபோல் வாலாஜாபேட்டையை சேர்ந்த அஞ்சலி(48), ரேணுகா மனோகரன்(46) ஆகியோரது பெயர்களும் பட்டியலில் இருக்கிறது. அவர்களின் அலைபேசி எண் என அறிக்கையில் உள்ள எண்ணில் தொடர்புகொண்டபோது அவை கணினி மையத்தின் எண்கள். இணையத்தில் புக்கிங் செய்த சென்டர் எண்ணையே தங்கள் எண்ணாக வழங்கியுள்ளனர்.

ஆதாரில் குளறுபடி

மதுரையை சேர்ந்த புஷ்பம்(46) பெயரும் இருக்க, அவரது எண்ணில் தொடர்பு கொண்டோம். அவரது மகன் மணிகண்டன், ‘‘அம்மா 1961-ல் பிறந்தாங்க. இப்போ 63 வயசு ஆகுது. ஆனால் ஆதார் கார்டில் 1972-ல் பிறந்ததாக தவறாக இருக்கு. அதையே வயதாக எடுத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு 2011-ல் அம்மா சபரிமலை போயிருக்காங்க. அப்போது வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பித்து போனோம்.”என்கிறார்.

ஆண் பெயரும் இடம்பெற்றதுநாம் அதுவரை அழைத்தவர்கள் அனைவருமே 50 வயதுக்கு மேலானவர்களே. ஆனால் லிஸ்டில் வயது தவறாக உள்ளது. ஆனால் சென்னை தண்டலத்தைச் சேர்ந்த பரஞ்ஜோதி மட்டும் “ஆமாம்…இந்த ஆண்டு மாலை போட்டு, விரதம் இருந்து சபரிமலைக்கு போய் வந்தேன். எனக்கு 47 வயது ஆகிறது என்றார்.

ஆனால் பரஞ்ஜோதி பெண்ணல்ல…ஆண் என்பது தான் விசயமே! ’’என் பேரை எதுக்கு சார் இந்த லிஸ்டில் கொடுத்தாங்க.” என இன்னும் குழம்பிப்போய்தான் இருக்கிறார் பரஞ்ஜோதி.

இதேபோல் சேலத்தைச் சேர்ந்த பத்மினி (47), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மீனாட்சி(48), கஜேந்திரன் மனைவி அமுதா (48), சேலம் விஜயலெட்சுமி(46), விழுப்புரம் சரஸ்வதி(48) உள்பட சிலரது பெயர்கள் தொடர்பு எண் இல்லாமல் தரிசித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படி நடந்தது தவறு?

கேரள முதல்வரின் தனிச்செயலாளர் எம்.வி.ஜெயராஜன், ‘‘இணையவழியில் புக்கிங் செய்து வந்த எட்டு லட்சம் பேரில் 51 யுவதிகள் இருப்பது அவர்கள் தாக்கல் செய்த பட்டியலின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டது தான் இந்தத் தகவல்கள். நீதிமன்றத்தில் இது தகவலாகத்தான் சொல்லப்பட்டது. அரசு ஆவணமாக தாக்கல் செய்யவில்லை.

சீதா என்ற தமிழகப்பெண் விவகாரத்தில் இன்டர்நெட் மையத்தில் தவறாக வயதை பதிந்துள்ளனர். இப்படி அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களே காரணமே ஒழிய, அரசு அல்ல”என விளக்கியுள்ளார்.

நீதிமன்றத்தில் இதுகுறித்து பேசும் முன்னர் ஒருமுறை காவல்துறையை வைத்து உறுதி செய்திருக்கலாம் என கேரளத்தில் இருந்தே குரல்கள் ஒலிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x