Last Updated : 13 Jan, 2019 01:27 PM

 

Published : 13 Jan 2019 01:27 PM
Last Updated : 13 Jan 2019 01:27 PM

மாயாவதி உயிரைக் காப்பாற்றிய பாஜக தலைவர்; சமாஜ்வாதி தொண்டர்கள் தாக்குதல்: 1995-ல் நடந்த பரபரப்பு சம்பவம்

அகிலேஷ்சிங் யாதவ் கட்சியுடன் கூட்டணி வைத்த பின் அவர்களிடம் 1995-ல் மாயாவதி சிக்கித் தப்பிய சம்பவம் நினைவுகூறப்படுகிறது. அப்போது சமாஜ்வாதியினரிடம் கம்பு சுழற்றி பாஜகவின் மூத்த தலைவர் மாயாவதியை காப்பாற்றி இருந்தார்.

 

கடந்த டிசம்பர் 6, 1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் ராமர் கோயில் மீதான அரசியல் சூடு பிடித்திருந்தது. இதனால், உபியில் முதல்வர் கல்யாண்சிங் தலைமையில் போட்டியிட்ட பாஜக 1993 தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வந்தது.

 

ஆனால் தனி மெஜாரிட்டிக்கு சில தொகுதிகள் இல்லாமல் தவித்தது. இந்த சூழலில் பாஜக ஆட்சி உபியில் அமைவதை தடுக்க முலாயம்சிங்கின் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜின் நிறுவனரான கன்ஷிராமும் கூட்டணி அமைத்தன.

 

இருவருக்குள் இருவருடங்களாக வளர்ந்த மனக்கசப்பால் லக்னோவின் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய கன்ஷிராம், திடீர் என முலாயம் மீதான அரசு ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதனால், கொதிப்படைந்த சமாஜ்வாதியினர் கலவரத்தில் இறங்கினர்.

 

அப்போது, தற்போதைய பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி தன் கட்சி நிறுவனரான கன்ஷிராமிற்கு நெருக்கமானவராக இருந்தார். லக்னோவின் மீராபாய் மார்கில் உள்ள உபி அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தவரை சமாஜ்வாதியினர் சூழ்ந்தனர்.

 

நாட்டின் எந்த அரசியல் தலைவருக்கும் இதுவரை நடைபெறாதபடி, அன்றைய சம்பவம் அனைவரையும் உலுக்கி இருந்தது. இந்த சம்பவத்தினால் எதிரும், புதிருமாகிவிட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜும், அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதியும் இன்று மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.

 

இதில், முலாயமிற்குப் பதிலாக அவரது மகன் அகிலேஷ் சமாஜ்வாதி தலைவராக உள்ளார். விருந்தினர் மாளிகை சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாகக் கருதப்படும் அஜய் போஸ் என்பவர் தனது நூலில் சமாஜ்வாதியினரிடம் இருந்து மாயாவதியை காத்தது பாஜகவின் மூத்த தலைவர் எனப் பதிவு செய்துள்ளார்.

 

அம்மாளிகையின் அறை எண் 1-ல் மாயாவதி தங்கியிருந்தார். அருகிலுள்ள மற்ற அறைகளில் பகுஜன் சமாஜின் எம்எல்ஏக்கள் தங்கியிருந்தனர். இவர்கள் சமாஜ்வாதியினர் மிரட்டலால் மாளிகையில் இருந்து தப்பினர்.

 

இது குறித்து அஜய் போஸ் தன் நூலில் மேலும் குறிப்பிடுகையில், ‘பெண்ணான மாயாவதி மீது ஆபாசமாகவும், அவரது சமூகத்தை குறிப்பிட்டும் சமாஜ்வாதியினர் கடுமையாக விமர்சித்தினர். அறைக்கான குடிநீர் மற்றும் மின்சாரத்தையும் துண்டித்தனர்.

 

இவர்களிடம் இருந்து தடுத்து மாயாவதியை பாஜக தலைவரான பிரம்மதுத் துவேதி அப்போது காப்பாற்றி அழைத்து சென்றார். அதன் பிறகே உபி போலீஸார் அங்கு வந்தனர்.’ எனத் தெரிவித்துள்ளார்.

 

பாஜக எம்எல்ஏவாக இருந்த பிரம்மதுத், ராஷ்டிரிய ஸ்வய சேவக்கில் தற்காப்பு பயிற்சி பெற்றவர். இந்த பின்னணியால், துவேதி போலீஸ் வரும்வரை அங்கு கம்பை சுழற்றி சமாஜ்வாதியினருடன் சண்டையிட்டதாகவும் அவரது மகன் சுனில் தத் துவேதி நினைவு கூர்ந்துள்ளார்.

 

இதற்காக துவேதி குடும்பத்தினர் மீது இன்றும் மாயாவதி நன்றி காட்டி வருகிறார். பிப்ரவரி 15, 1997-ல் துவேதி சுட்டுக் கொல்லப்பட்டு விட அவரது தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது.

 

அங்கு துவேதியின் மனைவி பாஜகவில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தன் கட்சி வேட்பாளரை எவரையும் மாயாவதி நிறுத்தவில்லை.

 

தற்போது சுமார் 25 வருடங்களுக்கு பின் மீண்டும் சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்துள்ள மாயாவதி மீது விருந்தினர் மாளிகை சம்பவத்தை அவர் மறந்து விட்டதகாக் குறிப்பிட்டு பல்வேறு வகை விமர்சனங்கள் எழுந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x