Published : 04 Jan 2019 11:28 AM
Last Updated : 04 Jan 2019 11:28 AM
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை இரவு சசிகலா என்ற 46 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் தரிசனம் செய்தததாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் அதனை மறுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் சசிகலா, "நான் 48 நாட்கள் ஐயப்பனுக்கு விரதம் இருந்தேன். 18 படிகளில் ஏறினேன். அப்போது என்னை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் என்னால் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. நான் உண்மையான ஐயப்ப பக்தை. என்னை ஏன் போலீஸார் தடுத்து நிறுத்தினர்" என்றார்.
ஆனால், சில ஊடகங்களில் சசிகலா 18 படிகளில் ஏறி ஐயப்ப தரிசனம் செய்ததாகவும். அதனை கேரள போலீஸார் உறுதி செய்தததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு கூறியது.
இத்தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரள இடதுசாரி அரசு முனைப்பு காட்டிய நிலையில், சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இதனால் சபரிமலை நடை திறக்கப்படும் போதெல்லாம் பிரச்சினை வெடித்தது. இதனால் நடை திறக்கும் காலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது, மலப்புரம் பகுதியைச் சேர்ந்த கனகதுர்கா (44), கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து அம்மினி (40) ஆகியோர் புதன் கிழமை அதிகாலை சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கேரளாவில் முழு அடைப்புப் போராட்டம் நேற்று நடந்த நிலையில் நேற்றிரவு மேலும் ஒரு பெண் தரிசனம் செய்ததாக தகவல் வெளியானது. ஆனால், சம்பந்தப்பட்ட பெண்ணோ இதனை மறுத்திருக்கிறார்.
போலீஸ், பக்தை சொல்லும் முரண்பட்ட தகவல்களால் குழப்பம் நீடிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT