Published : 10 Jan 2019 11:54 AM
Last Updated : 10 Jan 2019 11:54 AM
124 ஆவது அரசமைப்புச் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மாநிலங்களவையில் நேற்று அதிமுக அவைத்தலைவர் நவநீதகிருஷ்ணன் உரையாற்றினார். இதன் வாக்கெடுப்பில் பங்கு கொள்ளாமல் அக்கட்சியின் 13 உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து நவநீதிகிருஷ்ணன் பேசியதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் இந்த மசோதாவை அதிமுக வலுவாக எதிர்க்கிறது. இதை ஏற்கெனவே பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் கொண்டுவந்து, உச்ச நீதிமுன்றம் அதனை ஏற்க மறுத்துள்ளது.
இடஒதுக்கீடு என்பது, வரலாற்று ரீதியாக ஒடுக்கப்படுபவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை களைவதற்கான சலுகை. சமூகத்தில் சில வகுப்பையும், சாதியையும் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வந்துள்ளதாக வரலாறு கூறுகிறது.
அவர்கள் மீதான அடக்குமுறையை மாற்றுவதற்கு அளிக்கப்பட்ட சலுகையே இடஒதுக்கீடு. சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு அல்லாமல் பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து இடஒதுக்கீடு வழங்குவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
மேலும் இந்த பொருளாதார ரீதியான வரையரையை அவ்வப்போது நிர்வாகத்துறை முடிவு செய்யும், அரசு முடிவு செய்யாது என்றும் கூறப்பட்டுள்ளது. வகுப்பின் அடிப்படையில் இல்லாமல், தனிநபர்களின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் யாருக்கும் பணி செய்யும் வகுப்பில் பிறந்தவர்கள் அல்ல. அவர்கள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு கிடையாது. இந்தியா 6 ஆவது பெரிய பொருளாதாரம் என்று கூறப்பட்டாலும், நம் நாட்டில் 98 சதவீதத்தினர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவே உள்ளனர்.
எனவே பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. தமிழ்நாட்டில், ஜெயலலிதா பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கு 69 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து, சமூக நீதி காத்த வீராங்கணையாக செயல்பட்டுள்ளார்.
மீதமுள்ள 31 சதவீதத்தின் கீழ் அனைத்து பிரிவினரும் போட்டியிடுகிறார்கள். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மசோதா தமிழ்நாட்டு மாணவர்களைப் பாதிக்கும். ஏற்கெனவே நாங்கள் 69 சதவீதம் இடஒதுக்கீடு அளித்துள்ளோம்.
இந்த 10 சதவீதம் இடஒதுக்கீட்டையும் சேர்த்தால், மொத்தம் 79 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதற்கு அரசியல் சட்டத்தில் இடம் இல்லை. இது தமிழக மக்களின் உரிமையைப் பாதிக்கிறது. நாங்கள் 69 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தது நன்கு சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில்தான். உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இதற்கான தரவுகளை தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அளித்தது.,
அதன் பின்னர் அவர்கள், நன்கு ஆய்வு செய்து தமிழக அரசிற்கு ஓர் அறிக்கை அனுப்பினார். இதற்கான அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் இன்னும் உச்ச நீதிமன்ற நிலுவையில் உள்ளது.
பின்னர் இதற்காக ஜெயலலிதா தொடுத்த சட்ட போராட்டத்தின் பயனாக, இந்த சட்டம் அரசமைப்புச்சட்டத்தின் 9 ஆவது அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கொண்டவந்துள்ள மசோதாவில், எந்த அடிப்படையில் 10 சதவீதம் இடஒதுக்கீடு என்று முடிவு செய்துள்ளீர்கள்?
தமிழகத்திற்கு பாதிப்பு
தமிழகம் இந்த சட்ட திருத்தத்தால் பாதிக்கப்படும் என்பதால் நாங்கள் கடுமையாக இதனை எதிர்க்கிறோம். இந்த மசோதாவை கொண்டுவருவதற்கான சட்ட ரீதியான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளதா என்றும் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
இடஒதுக்கீடு என்ற வார்த்தையே அரசமைப்புச் சட்ட பிரிவு 15-ல் கிடையாது. சிறப்பு சலுகை என்ற சொல்லே அதில் உள்ளது. தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள பிரிவில் இடஒதுக்கீடு என்று இணைத்துள்ளீர்கள்.
இடஒதுக்கீடு குறித்து அரசமைப்புச் சட்டப்பிரிவு 16-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரவு 15, வேறுபாடு குறித்தது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தீர்ப்புகளின்படி, இதற்கான அரசு அதிகாரம் நாடாளுமன்றத்தின் வரம்பிற்கு இல்லை.
ஏற்கெனவே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீதம் இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் கொண்டு வந்தது ஒரு நிர்வாக ஆணை, தற்போது கொண்டுவரப்பட்டிருப்பது அரசமைப்புச் சட்டதிருத்தம் என்று தற்போதைய அரசு கூறலாம். ஆனால் இது நீதிமன்றத்தின் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் சட்ட திருத்த மசோதா தமிழக மக்களின் அடிப்படை உரிமையை மறுக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் 15 ஆம் பிரிவினை பாதிக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை பாதிக்கிறது.
எனவே இந்த சட்டம் செல்லுபடியாகாது. நாங்கள் இதனை வன்மையாகக் கண்டித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம்.
இவ்வாறு நவநீதகிருஷ்ணன் மாநிலங்களவையில் உரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT