Last Updated : 28 Jan, 2019 02:59 PM

 

Published : 28 Jan 2019 02:59 PM
Last Updated : 28 Jan 2019 02:59 PM

விடுதலைக்குப் பின் வேலைவாய்ப்பு: திஹார் சிறைக்கைதிகளுக்கு யோகா கல்வி அளிக்கும் டெல்லி அரசு

விடுதலைக்குப் பின் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திஹார் சிறைக் கைதிகளுக்கு டெல்லி அரசு யோகா கல்வி அளிக்க உள்ளது. இதற்காக, மொரார்ஜி தேசாய் தேசிய யோகா பயிற்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய சிறைச்சாலையாக இருப்பது டெல்லியில் உள்ள திஹார் சிறை. இங்கு ஆயிரக்கணக்கில் இருக்கும் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்க தொழிற்கல்வியும், சுயதொழிற்பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இந்த வகையில், புதிதாக அவர்களுக்கு யோகா கல்வியின் 4 மாதச் சான்றிதழ், ஒரு வருட டிப்ளமா மற்றும் 3 வருடப் பட்டப்படிப்பு ஆகியவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை முடிப்பவர்களுக்கு விடுதலையான பின் வேலைவாய்ப்பு வழங்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் மூலமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ‘சஞ்சீவன்’எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லியின் தலைமைச் செயலாளரான விஜய் தேவ் கூறும்போது,  ''சிறை தண்டணை என்பது கைதிகளைத் திருத்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது. இதை செவ்வனே செய்து வரும் திஹார் சிறையில் யோகா கல்வியும் கைதிகளுக்கு அளிக்கப்படுகிறது.  இதற்காக, மொரார்ஜி தேசாய் தேசிய யோகா பயிற்சி கல்வி நிறுவனம், ஆயுஷ் அமைச்சகத்துடன் திஹார் சிறை நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் இட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்

திஹார் சிறையில் யோகா கல்வி பெறுபவர்கள் தம் சக கைதிகளுக்கு ஆசிரியர்களாகவும் அமர்த்தப்பட உள்ளன. இவர்களின் பட்டப்படிப்பிற்கு பின் யோகா கல்வியில் ஆய்வு செய்ய விரும்புபவர்களுக்கும் திஹார் சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்ய உள்ளது.

இந்த 'சஞ்சீவன்' திட்டம் திஹார் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கும் அமலாக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தினால் விடுதலையாகும் கைதிகளுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கும் வகையில் பலன் அளிக்கும் வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x