Published : 17 Jan 2019 01:20 PM
Last Updated : 17 Jan 2019 01:20 PM
மும்பையில் நடன 'பார்'களுக்கு பாஜக அரசு பல கெடுபிடி விதித்த நிலையில் அவற்றில் பல விதிகளை தளர்த்தி உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். இது ஆளும் பாஜக அரசுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைந்த பிறகு முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பல்வேறு விதிகளை விதித்தார். நடன 'பார்'கள் மகாராஷ்டிர மாநில கலாச்சாரத்துக்கு எதிரானது. இத்தகைய 'பார்'களால் இளைஞர்கள் தவறான வழிக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது எனக் கூறி பாஜக அரசு கெடுபிடிகளை விதித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு முன் இன்று (ஜன.17) தீர்ப்பு வழங்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மும்பையில் நடன 'பார்'களுக்கான கெடுபிடிகள் தளர்த்தப்படுவதாக அறிவித்தனர். முன்னதாக, மகாராஷ்டிரா அரசு கலாச்சார காவல் செய்ய முற்படுவது ஏன் என்றும் நீதிமன்றம் வினவியது.
"நடன விடுதிகளில் மதுபானங்கள் வழங்கப்படலாம். நடன விடுதிகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 1 கி.மீ. தூரத்துக்குள் இருக்கக் கூடாது என்ற வேண்டுகோள் மும்பை போன்ற நெருக்கடி மிகுந்த நகரத்தில் ஏற்புடையதல்ல.
நடன 'பார்'களில் ஆடும் பெண்களுக்கு டிப்ஸ் வழங்கலாம். ஆனால் அவர்கள் மீது சில்லறைக் காசுகளையோ ரூபாய் நோட்டுகளையோ போடக்கூடாது.
நடன அரங்குக்கும் 'பார்'களுக்கும் இடையே தடுப்பு அமைக்கத் தேவையில்லை. அதேபோல் தனிநபர் சுதந்திரம் கருதி நடன 'பார்'களில் சிசிடிவி கேமரா அமைக்கத் தேவையில்லை.
அதேபோல் லைசன்ஸ் வழங்குவதற்கு நடன 'பார்' அனுமதி கோரும் நபர் நல்ல குணநலம் கொண்டவராக இருக்க வேண்டும் என்ற விதியும் தள்ளுபடி செய்யப்படுகிறது".
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT