Last Updated : 27 Dec, 2018 05:58 PM

 

Published : 27 Dec 2018 05:58 PM
Last Updated : 27 Dec 2018 05:58 PM

உ.பி.யில் பசுவதை தடுப்பின் பேரில் மீண்டும் தாக்குதல்:  2 பசுக்கள் பலி

உ.பி.யில் பசுவதை தடுப்பின் பேரில் மீண்டும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த முறை மனித உயிர்கள் தப்பிவிட இரண்டு பசுக்கள் பலியாகி உள்ளன.

உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள அலிகருக்கு அருகில் கேய்ர் அமைந்துள்ளது. இங்குள்ள தப்பல் சாலையில் நேற்று முன் தினம் இரவு ஒரு வாகனத்தில் பத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் கொண்டு செல்லப்பட்டன. இவர்களை வழியில் மடக்கிய பசுப்பாதுகாவலர்கள், அவர்களிடம் எந்த விசாரிப்பும் செய்யாமல் கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினர். இதனால், வாகன ஓட்டுநர் மற்றும் உடன் இருந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

அரசுப் பணியாளர்களான அந்த இருவரும் டப்பலில் மேய்ந்துகொண்டிருந்த பசுக்களை அருகிலுள்ள அரசு கோசலையில் விட கொண்டு சென்றனர். இதைக் கூட விசாரிக்காமல் அவர்களை அங்கு வந்த கும்பல் தாக்கத் தொடங்கினர்.

இந்நிலையில், சாலையில் கூடிய பொதுமக்களுடனும் பசுக்காவலர்கள் அங்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி மறியல் செய்தனர். இதனால், பல மணிநேரங்களாக நெரிசல் ஏற்பட்டதுடன் சில வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடந்தது.

இதனிடையில், அங்கு அலிகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் குமார் சஹானி தன் படையுடன் வந்திறங்கினார். அங்கிருந்தவர்கள் இடையே இரு கரம் கூப்பி வணங்கி அஜய் குமார் கேட்டுக் கொண்ட பின்பும் கூட்டத்தினர் கலையவில்லை. இதனால், லேசாக தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது.

இது குறித்து தப்பல் காவல் நிலையத்தின் ஆய்வாளரான அனுஜ்குமார் ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கூறும்போது, ''சுற்றுப்புறங்களில் பயிர்களை மேய்வதாக விவசாயிகள் அளித்த தகவலால் 650 மாடுகளைப் பிடித்து கோகாய் கிராமத்தின் தற்காலிக அரசு கோசலையில் சேர்க்கப்பட்டு வந்தன. அதில் ஒரு வாகனத்தைப் பிடித்து பசுக்காவலர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி விட்டனர்'' எனத் தெரிவித்தார்.

இதில் போலி தகவலை வாட்ஸ் அப்பில் அனுப்பி கூட்டம் கூட்டியதாக நால்வர் கைது செய்யப்பட்டனர். நல்லவேளையாக இந்தக் கலவரத்தில் உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை. ஆனால், சிறிய வாகனத்தில் பசுமாடுகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. இதனால், நெரிசலுக்கு உள்ளாகி இரண்டு பசுக்கள் பலியாகின.

இதற்கு முன் டிசம்பர் 3 ஆம் தேதி அலிகருக்கு அருகிலுள்ள மாவட்டமான புலந்த்ஷெஹரில் பசுவதை எதிர்ப்பால் கலவரம் நடைபெற்றது. இதில், அங்குள்ள காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x