Last Updated : 10 Dec, 2018 12:18 PM

 

Published : 10 Dec 2018 12:18 PM
Last Updated : 10 Dec 2018 12:18 PM

தாஜ்மகாலின் மார்பிள் கட்டிடம் காண கூடுதலாக ரூ.200 நுழைவுக்கட்டணம்: இன்று முதல் அமல்

மும்தாஜ்- ஷாஜஹான் சமாதியின் மீது கட்டப்பட்டுள்ள தாஜ்மகாலின் முக்கிய மார்பிள் கட்டிடத்தை காண கூடுதலாக ரூ.200 கட்டணம் வசூலிக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் முக்கிய உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

17 ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஷாஜஹான் தன் காதல் மனைவியின் நினைவாக எழுப்பிய வரலாற்று சின்னம் தாஜ்மகால். உலக அதிசயமான இந்த நினைவுச்சின்னத்தின் முக்கிய பகுதி வெள்ளைநிற மார்பிள் கற்களால் கட்டப்பட்டுள்ளது.

இந்த முக்கியக் கட்டிடம் மற்றும் அதை சுற்றியுள்ள மினராக்களுக்கு பார்வையிட வரும் பொதுமக்களால் சேதம் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டிடத்தின் அடியில் உள்ள ஷாஜஹான் மற்றும் மும்தாஜின் சமாதிகளுக்கும் சேதம் ஏற்படுவதாக புகார் இருந்தது.

இதற்காக அக்கட்டிடத்தின் மீது ஏறி செல்லாமல் வெளியில் இருந்தபடி தாஜ்மகாலை ரசிக்க பொதுமக்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டு வந்தது. இதை ஏற்று இன்று முதல் தாஜ்மகாலின் முக்கிய கட்டிடத்தின் உள்ளே சென்று காண ரூ.200 கூடுதல் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆக்ராவின் இந்திய தொல்பொருள் ஆய்வத்துறையின் கண்காணிப்பாளரான வசந்த் ஸ்வர்ணகர் கூறும்போது, ‘‘ஏற்கெனவே செலுத்தப்பட்டுவரும் ரூ.50-ல் தாஜ்மகால் வளாகத்தில் நுழைந்து அதை தூரத்தில் மட்டுமே பார்க்க முடியும். அருகில் மற்றும் உள்ளே நுழைந்து பார்க்க வேண்டுமானால் இனி மொத்தம் ரூ250 செலுத்த வேண்டும். வெளிநாட்டினருக்கு ரூ.1300, சார்க் நாட்டவர்கள் ரூ.340-க்கு பதிலாக ரூ.740 செலுத்த வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.

இனி ரூ.50 கட்டணமாக செலுத்துபவர்கள் தாஜ்மகாலின் முக்கிய கட்டிடம் அமைந்துள்ள மார்பிள் மேடைக்கு கீழே இருந்தபடி மட்டுமே ரசிக்க முடியும். அதன் மேலே ஏறிச் சென்று கட்டிடத்தில் நுழைய முடியாது. உள்ளே இறங்கி சமாதிகளையும் காணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறம் அமைந்துள்ள மினாராக்களையும் தொட்டு ரசிக்கவும் அனுமதி இல்லை.

முகலாயர்கள் இந்தியாவை ஆண்ட போது கட்டிய வரலாற்று சின்னங்களில் மிகவும் சிறந்ததாக தாஜ்மகால் கருதப்படுகிறது. இதை கடந்த 1983-ல் யுனஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கட்டது. அதில், ‘சர்வதேச அளவில் பார்வையை கவர்ந்த, இந்தியாவின் முஸ்லிம் கட்டிடங்களின் ஆபரணம்’ எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x