Published : 20 Dec 2018 09:21 AM
Last Updated : 20 Dec 2018 09:21 AM
தமிழக கோயில் நிர்வாகத்தில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும், கோயில்கள் அனைத்து ஆளுநர் தலைமையிலான குழுவின் கட்டுப்பாட் டில் பராமரிக்க வேண்டும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கங்கப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தொன்மையான வரலாறு, கலாச்சாரத்தின் கம்பீர சாட்சிகளாக இருப் பது கோயில்கள்தான். சைவம், வைண வத்தை போற்றிய மன்னர்கள் பிரம்மாண்ட கோயில்களை எழுப்பியதுடன் கோயிலுக்கு தானமாக அளித்த நிலங்களை கோயில் கல்வெட்டுகளில் செதுக்கி வைத்தனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட் டில் உள்ள கோயில்களில் கடந்த 60 ஆண்டுகளில் அதிகாரிகள் துணையுடன் சிலைகள் கடத்தப்பட்ட தகவல் மக்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடத்தப்பட்ட சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்டுவரும் நிலையில், கோயில் நிர்வாகத்தில் அரசு இருக்கக்கூடாது என்ற கருத்தும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது.
இந்தக் கருத்தை மிகவும் அழுத்தமாக 30 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசுக்கு தெரிவித்தவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கங்கப்பா. இவர், வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மத்திய அரசை எதிர்த்து, 400 ஆண்டுகள் வழிபாட்டில் இல்லாத வேலூர் கோட்டை கோயிலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தவர். கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் தாளகரே கிராமத்தில் பிறந்து, 1967-ல் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகி, தமிழகத் தில் திறம்பட பணியாற்றியவர் கங்கப்பா. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருடன் நெருங்கிப் பழகியவர். இன்று மாவட்டந் தோறும் நடைபெறும் திங்கள் குறைதீர்வு கூட்டம், மனுநீதி நாள் முகாம்களின் முன்னோடி கங்கப்பாதான்.
பெங்களூருவில் வசித்துவரும் அவரை தமிழக கோயில்கள், அவற்றை பாதுகாப்பது குறித்து ‘இந்து தமிழ்’ சார்பில் நேரில் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் கூறும்போது, ‘‘தமிழ் மன்னர்களால் எழுப்பப்பட்ட கோயில்களை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். இவற்றை நாம் உருவாக்க முடியாது என்றாலும் பாதுகாக்க வேண்டும். கோயில்களை பாதுகாக்கும் கடமையில் இருந்து அரசு தவறிவிட்டது. கோயில் சொத்துக்களை அனுபவிக்க அரசியல்வாதிகள் விரும்பு கின்றனர்.
நான், வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது வேலூர் கோட்டை ஜலகண் டேஸ்வரர் கோயிலில் 400 ஆண்டுகள் மூலவர் வழிபாடு இல்லாமல் இருப்பதை எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கோயி்ல் இருந்ததால் கவனத்துடன் செயல்பட வேண்டி இருந்தது. ஜலகண்டேஸ்வரர் கோயில் மீட்புக் குழுவினர் உதவியுடன் கடந்த 1981-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி அதிகாலை சிலையை வைக்க முடிவானது. முன்கூட்டியே, வேலூர் கோட்டையின் தொல்லியல் துறை கண்காணிப்பாளரை தருமபுரிக்கு ஆய்வுக்குச் செல்லுமாறு கூறிவிட்டேன். நான், திருவண்ணாமலைக்கு ஆய்வுக்காக சென்றுவிட்டேன். திட்டமிட்ட படி சத்துவாச்சாரியில் இருந்து எடுத்து வரப்பட்ட சிவலிங்கம் மார்ச் 16-ம் தேதி அதிகாலை கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் ஆயிரக்கணக்கான மக்கள் கோயிலில் திரண்டு வழிபட்டனர்’’ என்றார்.
வீட்டுச் சிறையில் கங்கப்பா
சிலை வைக்கப்பட்ட சம்பவம் அந்த நேரத்தில் மத்திய, மாநில அரசுகளின் கவுரவ பிரச்சினையாக பார்க்கப்பட்டது. அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் ஆட்சியர் பங்களாவில் கங்கப்பா ஒரு நாள் முழுவதும் சிறை வைக்கப்பட்டார். ‘‘கோயில் பிரச்சினையில் எம்ஜிஆர் எனக்கு ஆதரவாக இருந்தார். ஒரு வாரம் கழிந்த பிறகு பிரதமர் அலுவலக துணை செயலாளர் பாலகிருஷ்ணன் தொலைபேசியில் பேசி னார். ‘கோயில் விவகாரத்தில் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது என மேடம் (இந்திரா காந்தி) கூறிவிட்டார்’ என்ற தகவல் நிம்மதியாக இருந்தது’’ என்றார் கங்கப்பா.
ஒரு சமயம் தஞ்சாவூருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த இந்திராகாந்தியை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த கங்கப்பா, திறம்பட செயல்பட்டு இந்திரா காந்தி மீதான கொலை முயற்சி சதியை முறியடித்துள்ளார். இந்த நிகழ்வுதான் வேலூர் கோட்டை கோயில் பிரச்சினையில் கங்கப்பாவை இந்திரா காந்தி காப்பாற்றியுள்ளார்.
தமிழக ஆளுநர் தலைமையில் தனி குழு
தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட் டில் இருக்க வேண்டுமா? என்பது குறித்த அறிக்கை அளிக்கும் பொறுப்பு கங்கப்பா விடம் எம்ஜிஆர் வழங்கினார். அவர் அளித்த அறிக்கைக்கு அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு நடந்த தேர்தலில், ‘கங்கப்பா குழுவின் அறிக்கை அமல்படுத்தப்படும்’ என்று ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. பின்னாளில் அவரும் அந்த அறிவிப்பை கிடப்பில் போட்டுவிட்டார். தற்போது, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் பலர் சிலை கடத்தல் மற்றும் பழமையான சிலைகளை மாற்றிய சம்பவங்களில் கைதாகும் தகவல்களால் மீண்டும் கங்கப்பா குழுவின் அறிக்கையை சிலர் தூசு தட்டுகின்றனர்.
இதனைக் கூறும் கங்கப்பா, ‘‘கோயில் களில் இருந்து கிடைக்கும் வருமானம் கோயில்கள் பராமரிப்புக்காகவே பயன் படுத்த வேண்டும். கோயில்கள் அனைத்தும் ஆளுநரின் தலைமையில் அமைக்கப்படும் குழுவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். எனது அறிக்கையைப் போலவே ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது தென்மாநில கோயில்களை பாதுகாக்க தமிழக ஆளுநர் தலைமையில் குழு அமைக்க அரசாணை பிறப்பித்தார்’’ என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT