Last Updated : 27 Dec, 2018 06:16 PM

 

Published : 27 Dec 2018 06:16 PM
Last Updated : 27 Dec 2018 06:16 PM

திரும்பிப் பார்க்கிறோம் 2018: இந்தியா - தண்ணீரில் மிதந்த கடவுள் தேசம், வாஜ்பாய் மறைவு (மே முதல் ஆகஸ்ட் வரை)

 மே மாதம்

நோக்கு கூலி(மே. 2)

கேரளாவில் ‘நோக்கு கூலி’ நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிஅரசு அறிவித்தது. ‘நோக்கு கூலி’ என்பது ஒரு துறையில் அத்துறை சார்ந்த சங்கத்தினரைப் பணியமர்த்தாமல் வேறு வகையில் வேலை செய்ய வேண்டுமென்றால் அந்தக் கூலியை தொழிலாளர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பதாகும். கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகள் நிறைந்த மாநிலத்தில் நோக்கு கூலி ரத்து செய்யப்பட்டது பெரிய சீர்திருத்தமாகப் பார்க்கப்பட்டது.

கலங்கவைத்த தூசு புயல்(மே. 3)

உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இரவு நேரத்தில் பலத்த தூசு, மணல் காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழையால் 110 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கர்நாடகத் தேர்தல் (மே. 12)

கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளில் இரண்டைத் தவிர, 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் (இன்று) தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய பிரதான கட்சிகளாகப் போட்டியிட்டன.

தொங்கு சட்டப்பேரவை (மே.15)

கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியிலும், கர்நாடக பிரக்யவந்த ஜனதா கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது.

ஆந்திரா துயரம் (மே.16)

ஆந்திர மாநிலம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 22 பேர் பலியானார்கள். இதில் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று திரும்பியபோது இந்த துயரச் சம்பவம் நடந்தது.

பிடிவாத பாஜக (மே. 17)

காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றார்.

வரைவு செயல்திட்டம் (மே.17)

மத்திய அரசின் திருத்தப்பட்ட காவிரி வரைவு செயல் திட்டத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், பருவகாலம் தொடங்குவதற்கு (ஜூன் மாதம்) முன்பாகவே செயலாக்கத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது

ராஜினாமா (மே.19)

yedijpgஎடியூரப்பா100 

கர்நாடக சட்டப்பேரவையில் போதிய உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாகவே முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்

நிபா வைரஸ் (மே.22)

கேரளாவை வவ்வால் மூலம் நிபா வைரஸ் மக்களைத் தாக்கியது. குறிப்பாக கோழிக்கோடு, கொச்சின், எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பெரிய பாதிப்புக்குள்ளாகினார்கள். இந்த நிபா வைரஸ் காய்ச்சல் தாக்குதலால் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நோய் பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு செய்யத் தொடங்கியது

புதிய மலர்ச்சி (மே.23)

கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் புதிய ஆட்சி மலர்ந்தது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு குறைவான இடங்களே இருந்தபோதிலும் பாஜகவைத் தடுக்கும் நோக்கில் குமாரசாமியை முதல்வராக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. மாநிலத்தின் 24-வது முதல்வராக ஜேடிஎஸ் தலைவர் எச்டி குமாரசாமி பதவி ஏற்றுக்கொண்டார்.

பருவமழை தொடக்கம் (மே-29)

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்குப் பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியதாக இந்திய வானிலை மையம் (ஐஎம்டி) அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஜூன் மாதம்

தீர்ப்பு (ஜூன். 2)

பிஹார் மாநிலம், புத்த கயாவில் 2013-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 2 புத்த பிட்சுகள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வரவேற்பு(ஜூன். 7)

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி நடந்தது. இதில் முக்கிய அரசியல் திருப்பமாக காங்கிரஸ் வழிவந்தவரும், காங்கிரஸின் தீவிரமான தொண்டரும், தலைவருமான குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். இது தேசிய அரசியலில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.

அபு சலீம்(ஜூன். 7)

கடந்த 2002-ம் ஆண்டு டெல்லி தொழிலதிபர் அசோக் குப்தாவைக் கடத்தி, ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் மும்பை தாதா அபு சலீம் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் அபு சலீமுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தது.

சிக்கிய கார்த்தி சிதம்பரம் (ஜூன். 13)

Kartijpgjpgகார்த்தி சிதம்பரம்50 

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது

நிராகரிப்பு (ஜூன்.16)

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 குற்றவாளிகளை விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

அமித் ஷாவும், ரூ.745 கோடியும் (ஜூன். 21)

Amit-Shahjpg100 

கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கத்தின் போது, பாஜக தலைவர் அமித் ஷா இயக்குநராக இருக்கும் கூட்டுறவு வங்கியில், செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் 5 நாட்களில் ரூ. 745.59 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே நாடு முழுவதும் பணமதிப்பு நீக்கத்தால் மக்கள் அதிருப்தி அடைந்த நிலையில் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழர்களுக்கு விருதுகள் (ஜூன். 22)

தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் உள்ளிட்ட 21 எழுத்தாளர்களுக்கு யுவபுரஸ்கார் விருதும், கிருங்கை சேதுபதி உள்பட 21 எழுத்தாளர்களுக்குப் பால் சாகித்ய புரஸ்கார் விருதையும் டெல்லி சாகித்ய அகாடெமி அறிவித்துள்ளது.

பிளாஸ்டிக் தடை (ஜூன். 24)

ஒரே ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பல்வேறு வகை பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தெர்மாகோல் பயன்பாட்டுக்கு மகாராஷ்டிராவில் தடை கொண்டுவரப்பட்டது. தடையை மீறினால் ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் மற்றும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான பாஜக அரசு எச்சரிக்கை விடுத்தது.

நரோடா பாட்டியா நினைவு இருக்கா? (ஜூன். 25)

நாட்டையே உலுக்கிய குஜராத் கலவரம் அனைவருக்கும் நினைவிருக்கும். அப்போது, நரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த கலவரத்தில் 97 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், 3 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மும்பை நகரில் விழுந்த விமானம் (ஜூன். 28)

Plane-crash-in-Mumbaijpg100 

மும்பையில் உள்ள காட்கோபர் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நண்பகலில் சிறியரக விமானம் ஒன்று கட்டிடத்தின் மீது மோதி நொறுங்கி விழுந்தது. இதில் பயணம் செய்த 5 பேர் பலியானார்கள்.

ஜூலை மாதம்

பஸ்விபத்து துயரம்(ஜூலை. 1)

உத்தரகாண்ட் மாநிலம், பாரி மாவட்டத்தில் 200 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பயணிகள் பலியானார்கள். பாரி மாவட்டத்தில் பாகுன் நகரில் இருந்து ராம் நகருக்கு தனியார் பஸ் ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மலைப்பகுதி சாலையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ், சாலை ஓரத்தில் இருந்த 200 அடிபள்ளத்தாக்கில் கவிழ்ந்து, உருண்டது.

உலுக்கிய மர்ம மரணங்கள் (ஜூலை. 1)

buraiajpgடெல்லி புராரி குடும்பத்தினர்100 

டெல்லியின் வடபகுதியில் உள்ள சாந்த் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கண்ணைக் கட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்தனர். இதில் 7 பெண்கள், 4 ஆண்கள் அடங்கும். விசாரணையில் கடவுளைச் சந்திக்கப் போகிறோம் என்ற மூடநம்பிக்கையில் அனைவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாகத் தெரியவந்தது.

ஓராண்டு நிறைவு (ஜூலை.1)

gstjpg50 

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)வரி நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்தது. மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2017- ஜூன் 30-ம் தேதி நள்ளிரவில் ஜிஎஸ்டி வரியை அறிமுகம் செய்தது.

முதல் கூட்டம் (ஜுலை. 2)

தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்கு 31.24 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டு மத்திய நீர்வளத் துறை ஆணையர் மசூத் ஹூசைன் தலைமையில் முதல் கூட்டம் நடந்தது

தமிழகத்துக்குக் கெடு(ஜூலை. 12)

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை 2 மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. லோக்பால் சட்டப்படி மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது கட்டாயம். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்த அமைப்பை உருவாக்காமல் காலம் தாழ்த்தியதையடுத்து அஸ்வினி குமார் உபாத்யாயா என்பவர் தொடர்ந்த பொதுநலன் வழக்கில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது

வெள்ளப்பெருக்கு (ஜூலை. 17)

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டின. இதனால் காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரியில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது

15 ஆண்டுகளுக்குப் பின் (ஜூலை. 20)

Rahul-Gandhi-jpg100 

15 ஆண்டுகளுக்குப் பின் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்குப் பெரும்பான்மை இருந்ததால், தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்தத் தீர்மானத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரை அவர் மீதான தோற்றத்தை மக்கள் மத்தியில் உயர்த்தியது. அதேபோல, பிரதமர் மோடியைக் கட்டியணைத்ததும், பின்னர் தனது இருக்கையில் அமர்ந்து கண்ணடித்த சம்பவமும் விமர்சனத்தை உண்டாக்கியது.

சட்டத்திருத்தம் (ஜுலை-30)

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா மீது அனைத்துக் கட்சிகளும் விவாதம் நடத்தினாலும், இறுதியில் குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்தச் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.

ஆகஸ்ட் மாதம்

லஞ்சம் கொடுக்காதீர் (ஆகஸ்ட். 1)

லஞ்சம் கொடுப்பவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு இனி 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டம் அமலுக்கு வந்ததது. ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

கேரளப் பெருமழை (ஆகஸ்ட்.10)

kerala-floodjpg100 

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் விடாது மழை பெய்தது. இடுக்கி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 2401.6 அடியை கடந்தது. இதனால் அணையின் 5 மதகுகளும் ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், பெரியாறு, செருதோணி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. எர்ணாகுளம் மாவட்டத்துக்குள் வெள்ளநீர் புகுந்தது.

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டித்தீர்த்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்தனர். இடுக்கி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தர தடை விதிக்கப்பட்டது.

மறைவு (ஆகஸ்ட். 13)

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 89. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி 2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மக்களவை சபாநாயகராக இருந்தார். அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாபஸ் பெற்றபோது, அவர் பதவி விலகவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

72-வது ஆண்டு (ஆகஸ்ட். 15)

நாட்டின் 72-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். செங்கோட்டையில் ர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற மோடி 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

வாஜ்பாய் மரணம் (ஆகஸ்ட். 16)

பாஜகவின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் வாஜ்பாயின் உயிர் பிரிந்தது

கண்ணீரில் கடவுள் தேசம் (ஆகஸ்ட். 17)

கேரள மாநிலத்தில் கோரத் தாண்டவமாடிய மழையால், ஒரேநாளில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்தது. கடந்த 8 நாட்களுக்கும் மேலாகப் பெருமழை பெய்ததால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 14-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டன.

மறுப்பு (ஆகஸ்ட். 23)

கேரளாவின் வெள்ள நிவாரணத்துக்காக ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்த ரூ.700 கோடி நிதியுதவியை ஏற்க மத்திய அரசு மறுத்தது. வெளிநாடுகளின் நிதியுதவியை ஏற்க வேண்டாம் என்று அனைத்து இந்திய தூதரகங்களுக்கும் இ-மெயில் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

கார்வ ிபத்து (ஆகஸ்ட். 29)

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகன் ஹரிகிருஷ்ணா (61) தெலங்கானாவில் நடந்த சாலை விபத்தில் பலியானார். நெல்லூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்துபோது, நல்கொண்டா மாவட்டம், அன்னேபர்த்தி எனும் இடத்தில் கார் திடீரென நிலை தடுமாறி, சாலையில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

தொடரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x