Last Updated : 12 Dec, 2018 07:16 PM

 

Published : 12 Dec 2018 07:16 PM
Last Updated : 12 Dec 2018 07:16 PM

தமிழகக் காவல்துறைக்கு மத்திய அரசு நிதி ரூ.37 கோடி: மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் தகவல்

தமிழகக் காவல்துறைக்கு நடப்பு ஆண்டு நிதியாக நவம்பர் 30 வரை ரூ.37.38 கோடி வழங்கப்பட்டடுள்ளது. இந்த தகவலை அதிமுக உறுப்பினர் டாக்டர்.வா.மைத்ரேயன் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் அளித்த பதிலில் தெரிவித்தார்.

 

இது குறித்து இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் ஜன்ஸ்ராஜ் அஹிர் கூறியதாவது:

 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை மற்றும் பொது அமைதி காத்தல், காவல்துறை பலப்படுத்துதல் சம்மந்தப்பட்ட செயல்பாடு மற்றும் தேவையான உபகரணங்கள் வழங்குவது என்பது மாநில அரசின் நிர்வாக வரம்புக்குட்பட்டது,என்றாலும் மாநில அரசின் தேவை மற்றும் செயல்பாட்டிற்கு கூடுதல் வலுசேர்க்க ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை கட்டமைப்பு மேம்படுத்தவும், நவீனமயமாக்கவும் அந்தந்த மாநில அரசின் கோரிக்கையின்படி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

 

இதன் அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளில் முறையே ரூ.63.90 கோடி, ரூ.89.24 கோடி, ரூ.15.54 கோடி நிதி அளித்துள்ளது. 2018-19 நடப்பு ஆண்டு 30-11-2018 வரை ரூ.37.85 கோடி நிதி மத்திய அரசு வழங்கியுள்ளது.

 

இதில் சென்னை மெகா சிட்டி திட்டத்திற்காக 2015-16 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ரூ.29.49 கோடி மற்றும் 2016-17 ல் வழங்கப்பட்ட ரூ.58.91 கோடியும் அடங்கும். எனத் தெரிவித்தார்.

 

மேலும் ஹன்ஸ்ராஜ் கூறுகையில், 2005-2011 ஆண்டுகளில் முதல் கடலோர பாதுகாப்பு திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல் அளித்தார்.

 

தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 2011-2020 ஆம் ஆண்டுகளுக்கான இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ்

 

தமிழ்நாட்டில் மொத்தம் 40 கடலோர காவல் நிலையங்கள் அமைத்திட அனுமதி வழங்கப்பட்டு அதில் 37 கடலோர காவல் நிலையங்கள் இயங்கி வருவதாகவும் ஹன்ஸ்ராஜ் தெரிவித்தார்.

 

முன்னதாக, அதிமுகவின் உறுப்பினரான மைத்ரேயன், தமிழ்நாட்டில் காவல்துறை கட்டமைப்பு மேம்படுத்தவும் நவீனமயமாக்கவும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதா எனவும், சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள கடலோர மாவட்டங்களில் கடலோர காவல் நிலையங்கள் கூடுதலாக அமைத்திட மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x