Published : 11 Dec 2018 08:10 PM
Last Updated : 11 Dec 2018 08:10 PM
வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸிடம் இருந்த கடைசி மாநிலமும் கைவிட்டு போய் உள்ளது. இன்று வெளியான ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மிசோராமிலும் அக்கட்சிக்கு தோல்வி கிடைத்துள்ளது.
அசாம், மேகாலாயா, திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோராம் என வட கிழக்குப் பகுதியில் ஏழு மாநிலங்கள் அமைந்துள்ளன. ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் இம்மாநிலங்களில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் தனது ஆட்சியை இழக்கத் துவங்கியது.
அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மற்றும் மேகாலயா ஆகியமாநிலங்களில் பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் ஆட்சியை பிடித்துள்ளன. பல ஆண்டுகளாக நிலவி வந்த தனது ஆட்சியில் காங்கிரஸிடம் மிஞ்சி இருந்தது மிசோராம் மட்டுமே.
இன்று வெளியான அம்மாநில தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் இந்த இழப்பின் பலன், மற்ற மாநிலங்களை போல் பாஜக மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகளுக்கு கிட்டவில்லை. மாறாக, மிசோ தேசிய முன்னணி(எம்என்எப்) கட்சிக்கு கிடைத்துள்ளது.
மிசோராமில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் எம்என்எப் 26, காங்கிரஸ் 5, பாஜக ஒன்று மற்றும் இதர கட்சிகளுக்கு எட்டு இடங்கள் கிடைத்துள்ளன. கடந்த 1986 முதல் காங்கிரஸ் அல்லது எம்என்எப் என இருகட்சிகளும் மாறி, மாறி ஆட்சி புரிந்தன.
தற்போது, மிசோராமின் ஆட்சி மீண்டும் எம்என்எப் கட்சியிடம் சென்றுள்ளது. இக்கட்சியுடன் கூட்டு வைக்க பாஜக தேர்தல் துவக்கம் முதல் பெரும் முயற்சி செய்தது. ஆனால், அதனுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் எதுவும் இல்லை என எம்என்எப் உறுதியாக அறிவித்திருந்தது.
எனவே, வட கிழக்குப்பகுதியில் பாஜகவிற்கு ஆளுமை இல்லாத ஒரே மாநிலமாக மிசோராம் இருக்கும். அதேசமயம், பாஜக அவ்வப்போது கூறிவந்த ’காங்கிரஸ் முக்த்
பாரத்(காங்கிரஸ் அல்லாத இந்தியா)’ ஏற்படவில்லை. ஆனால், காங்கிரஸ் அல்லாத வடகிழக்குப்பகுதி ஏற்பட்டுள்ளது.
எம்என்எப் கட்சி உருவான வரலாறு
அசாமுடன் இணைந்திருந்த மிசோராமின் பகுதிகளில் ஒருமுறை பெரிய பஞ்சம் ஏற்பட்டது. இதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து போராட வேண்டி 1959 ஆம் ஆண்டு லால்டெங்கா என்பவர் தலைமையில் எம்என்எப் துவக்கப்பட்டது.
தொடர்ந்து தலைமறைவு போராளிகளாக இருந்துவந்த எம்என்எப் அமைப்பினரால் 1966-ல் பெரிய மாற்றம் வந்தது. பிறகு இந்த அமைப்பினருக்கு மத்திய அரசுடன் 1986-ல் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அதை தொடர்ந்து எம்என்எப் தனது போராட்டங்களை கைவிட்டு அரசியல் கட்சியாக மாறியது.
1986-ல் வந்த சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சியின் முதலாவது முதல் அமைச்சராக லால்டெங்கா பதவி ஏற்றார். அடுத்து 1998-ல் வந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜோரம்தங்கா முதல் அமைச்சரானார். 2014 மக்களவை தேர்தலில் பாஜக உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் ’ஐக்கிய ஜனநாயக முன்னணி’ எனும் பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT