Published : 03 Dec 2018 03:20 PM
Last Updated : 03 Dec 2018 03:20 PM
கடந்த சனிக்கிழமை ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் 2016ல் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் கறுப்புப் பணப் புழக்கத்தில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐயிடம் இதுகுறித்து பேசிய ராவத் மேலும் தெரிவித்ததாவது:
பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் தேர்தலின்போது தவறாக பயன்படுத்தப்படும் கறுப்புப் பணப் புழக்கங்கள் தடுக்கப்படும் என்ற நம்பப்பட்டது. ஆனால் அவ்வாறு கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதற்கான எந்தவித புள்ளிவிவரமும் இல்லை. முந்தைய தேர்தல்களை ஒப்பிடுகையில், அதே மாநிலங்களில் பணப்புழக்கம் அதிக அளவில்தான் காணப்பட்டன.
பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு அரசியல் கட்சிகளிடமோ அல்லது அவர்களுக்கு நிதி அளிப்பவர்களிடமோ பணப் பற்றாக்குறை ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பொதுவாக, தேர்தல்களின்போது கறுப்புப் பணம் பயன்படுத்தப்பட்டது நன்றாக தெரிந்தது.
தேர்தல்களின்போது அதிக அளவில் பணம் புழங்குவதன் மீதான எந்தவித கண்காணிப்புகளும் தடுப்பு நடவடிக்கைகளும் இல்லை.
இவ்வாறு ராவத் தெரிவித்தார்.
2016, நவம்பர் 8 அன்று மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 ஆகிய நோட்டுகளை பணமதிப்பு நீக்க நடவடிக்கை செய்து புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை பிற்பாடு அறிமுகப்படுத்தியது.
அதிலிருநது, பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றன. மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பாஜக உறுப்பினர்களும் ஆதரவு கட்சிகளும் ஆதரித்தன.
கடந்த சனிக்கிழமை அன்று ராவத் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து சுனில் அரோரா, புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT