Published : 03 Dec 2018 03:28 PM
Last Updated : 03 Dec 2018 03:28 PM
சோதனை ஓட்டத்தின்போது 180 கிலோ மீட்டர் வேகத்தில், பயணம் செய்த, இந்தியாவில் ‘புல்லட்’ ரயிலுக்கு முன் மாதிரியாகக் கருதப்படும் இன்ஜின் இல்லாத ‘ட்ரெயின் 18’ ரயில் டெல்லி - வாரணாசி இடையே டிசம்பர் 25-ம் தேதி முதல் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிவேக ரயில்கள் உருவாக்கும் முயற்சியின் ஒருபகுதியாக சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவே ரக ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘ட்ரெயின் 18’ என பெயரிப்பட்டுள்ள இந்த ரயிலுக்கு தனியாக இன்ஜின் இல்லை. இழுவை வேகத்திறன் கொண்ட பெட்டிகளாக தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அதிவேக ரயிலான சதாப்தி ரயிலை விடவும், இந்த ரயிலின் பயண நேரம், 15 சதவிகிதம் குறைவாக இருக்கும். சுமார் 100 கோடி ரூபாய் செலவில் சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டது.
வைபை வசதி, ஜிபிஎஸ் தகவல், ‘டச் பிரீ’ பயோ டாய்லெட், எல்இடி லைட்டுகள், பயணத்தின்போது ஏசியின் அளவைக் கூட்டி, குறைத்துக்கொள்ளும் வசதி என பல நாடுகளில் உள்ளது போன்ற வசதிகள் இந்த ரயிலில் செய்யப்பட்டுள்ளன.
இந்த ரயிலின் சோதனை ஓட்டமாக, கோட்டா - சவாய் மாதோபூர் இடையே நேற்று இயக்கப்பட்டது. மெல்ல மெல்ல வேகத்தை அதிகரித்த அந்த ரயில் ஒருகட்டத்தில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேகமாகப் பயணம் செய்தது. அப்போது அந்த ரயிலில் பயணம் செய்த ரயில்வே அதிகாரிகள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்தியாவின் அதிவேக ரயிலை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதி தொடங்கி வைக்க ரயில்வே திட்டமிட்டு வருகிறது.
புதுடெல்லி - வாரணாசி இடையே இயக்கப்படும் இந்த ரயில் ஆரம்பத்தில் 130 கிலோ மீட்டர் முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக இதன் வேகம் அதிகரிக்கும். அதன்படி காலை 6 மணிக்கு புதுடெல்லியில் புறப்படும் இந்த ரயில் 800 கிலோ மீட்டர் தொலைவை கடந்து பிற்பகல் 2 மணிக்கு வாரணாசியை வந்தடையும்.
வேகம் கூட்டப்பட்ட பின்பு இந்த ரயில் இன்னும் முன்கூட்டியே வாரணாசியை வந்தடையும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரயில் கட்டணம் மற்றும் தொடக்கவிழா குறித்து ரயில்வே அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாகவே கட்டணம் இருக்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment