Published : 17 Dec 2018 02:12 PM
Last Updated : 17 Dec 2018 02:12 PM
ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்றாவது முறை முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் இன்று பதவியேற்றுக்கொண்டார். துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றார்.
ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 99 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்ததையடுத்து, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆதரவோடு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு மூத்த தலைவர் அசோக் கெலாட், இளம் தலைவர் சச்சின் பைலட் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வந்தது. கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் நடந்த சமாதானப் பேச்சுக்குப் பின், அசோல் கெலாட்டுக்கு முதல்வர் பதவியும், சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவியும் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, ஜெய்ப்பூரில் இன்று காலை 10 மணிக்கு நடந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சரத் யாதவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஜெய்ப்பூரில் உள்ள ஆல்பர்ட் ஹால் மைதானத்தில் இன்று நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு ஆளுநர் கல்யாண் சிங் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அசோக் கெலாட் கடந்த 2008 முதல் 2003 வரையிலும், 2008 முதல் 2013 வரையிலும் இருமுறை முதல்வராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT