Last Updated : 22 Dec, 2018 09:05 AM

 

Published : 22 Dec 2018 09:05 AM
Last Updated : 22 Dec 2018 09:05 AM

ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமங்கள் கோரி தமிழக அரசிடம் வேதாந்தா நிறுவனம் மனு

ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமங்கள் கோரி மத்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் வேதாந்தா நிறுவனம் மனு செய்துள்ளது.

சுற்றுச்சுழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியங்களுக்கு கடந்த மாதம் அனுப்பப்பட்ட மனுக்கள் மீதான பதிலுக்காகக் காத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் உள்ள கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏலத்தை மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் (டிஜிஎச்) ஏலம் விட்டிருந்தது. இதற்காக, சேட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட படங்களில் கிடைத்த சதுரபரப்பளவில் ஹைட்ரோகார்பன் அமைந்த இடங்கள் கண்டறியப்பட்டன. கடந்த அக்டோபரில் விடப்பட்ட ஏலத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தமிழகத்தின் இரண்டு இடங்களை பெற்றுள்ளது. இங்கு தன் பணியை ஆரம்பிக்க வேதாந்தா, மத்திய அரசிடம் 25 மற்றும் தமிழக அரசிடம் 15 வகையான உரிமங்களை பெற வேண்டி உள்ளது. இந்த உரிமங்களை பெற்ற பிறகே அங்கு பணிகள் துவக்கப்படும் நிலை உள்ளது. எனவே, அதற்காக மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடந்த மாதம் மனு செய்துள்ளது. இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் வேதாந்தாவின் செய்தித்தொடர்பு வட்டாரங்கள் கூறும்போது, “நாங்கள் ஏற்கெனவே கூறியபடி உரிய உரிமங்கள் பெற்ற பின்பே தமிழகத்தில் பணிகளை துவக்குவோம். இதுகுறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்கவில்லை எனில் அதற்காக நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், மத்திய அரசின் டிஜிஎச்சில் விடப்பட்ட ஏலத்தில் எங்களுக்கு கிடைத்த இடங்கள் அனைத்தும் சட்டப்படியானவை” எனத் தெரிவித்தன.

வேதாந்தா நிறுவனம் நடத்தும் ஸ்டெர்லைட் ஆலை பலரை பலிகொண்ட துப்பாக்கிச்சூட்டால் மூடப்பட்டது. இதை எதிர்த்து அந்நிறுவனம் தேசிய பசுமை தீர்பாயத்தில் வழக்கு தொடுத்தது. இதில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தவகையில், ஹைட்ரோகார்பனுக்கும் எதிர்ப்பு கிளம்புவதால்அதை  எடுக்க தமிழக அரசு உரிமம் அளிக்காது எனக் கருதப்படுகிறது.

இது உறுதியானால் தமிழக அரசின் முடிவை எதிர்த்து வேதாந்தா நீதிமன்றங்களை அணுகும் என என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல் உரிமங்கள் அளிப்பதில் மத்திய அரசிடம் வேதாந்தாவிற்கு பிரச்சினை இருக்காது.

இந்த முறை ஏலம் விடப்பட்ட ஓஏஎல்பி எனப்படும் வகை திட்டம் நெடுவாசலில் இருந்ததை விட ஏக்கர் அளவில் பலமடங்கு பெரிதானது. வேதாந்தாவின் இருஇடங்கள், புதுச்சேரியின் காரைக்காலில் துவங்கி தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகியவற்றின் ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் அமைந்துள்ளன. இதன் தலைமை அலுவலகம் புதுச்சேரியில் அமைந்து செயல்பட உள்ளது. இதன் மீது மத்திய எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ’கடல்பகுதி’ என்பதால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என ஏலத்தின் போது கருத்து கூறி இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x