Last Updated : 24 Sep, 2014 09:37 AM

 

Published : 24 Sep 2014 09:37 AM
Last Updated : 24 Sep 2014 09:37 AM

சீன அரசின் அனுமதியால் உத்தராகண்டுக்கு வருவாய் இழப்பு: சீனாவுடன் இந்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தால் சிக்கல்

திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு சிக்கிம் வழியாக திறக்கப்பட இருக்கும் புதிய பாதை யால், உத்தராகண்ட் மாநிலத்துக்கு பல லட்சம் வருவாய் இழப்புகள் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

சீன அதிபரின் இந்திய வருகையால் கைலாஷ் மானசரோவருக்கு சிக்கிம் மாநிலத்தின் நாதெல்லா-பாஸ் வழியாக ஒரு புதிய பாதையை திறந்து விட இரு நாடுகள் இடையே கடந்த 19-ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால், தற்போது இந்தியாவில் இருக்கும் உத்தராகண்ட் மாநில வழியை பெரும்பாலான யாத்ரிகர்கள் தவிர்க்கும் சூழல் உருவாகி உள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் உத்தராகண்ட் மாநில அரசின் குமான் மண்டல் விகாஸ் நிகாம் (கே.எம்.வி.என்) அதிகாரிகள் கூறியதாவது:

எங்கள் துறை உதவியுடன் இந்தியாவில் இருந்து செல்லும் ஒரு யாத்ரிகர் மூலம் மாநில அரசுக்கு ரூ.32,000 வருவாய் கிடைக்கிறது. வருடத்துக்கு சுமார் 1,080 யாத்ரிகர்கள் செல்வதால், சுமார் மூன்றரை கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. மானசரோவருக்குச் செல்ல சிக்கிம் வழியாக புதிய பாதையைத் திறக்க சீனா அனுமதி அளித்துள்ளது. புதிய பாதையில் வாகனங்கள் மூலம் எளிதாகச் செல்ல முடியும். எனவே, கடினமான பழைய பாதையை யாத்ரிகர்கள் விரும்பமாட்டார்கள். எனவே, உத்தராகண்ட் மாநிலத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும்” எனத் தெரிவித்தனர்.

டெல்லி தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளரான ஆசைத்தம்பி கூறும்போது, ‘இந்த புனித பயணத்தில் பெரும்பகுதியான பாதை உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்தாலும், நேபாளத் தலைநகர் காத்மாண்டுவுக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து வாகனம் மூலம் கைலாச பர்வதத்துக்கு எளிதாக செல்ல ஒரு பாதை உள்ளது. இதற்கு செலவு அதிகம் என்பதாலும், பல இடர்பாடுகளைத் தாங்கி உத்தராகண்ட் வழியாக மேற்கொள்ளும் யாத்திரையே அதிக புனிதம் எனக் கருதுவதாலும் அந்த வழியாக செல்வதை விரும்புபவர்களும் உண்டு. எனினும், புதிய பாதையத் திறக்க சீனா அனுமதி அளித்துள்ளதால், மற்ற இரு பாதைகளின் பயன்பாடு குறையும்” என்றார்.

இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மானசரோவர் பாதை தொடர்பான இந்திய-சீன ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் என போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

அரசு சார்பில் யாத்ரிகர்களின் பயண ஏற்பாடுகளை செய்யும் கே.எம்.வி.என் மூலமாக இந்த வருடம் மானசரோவருக்கு யாத்திரை சென்றவர்கள் 910.

குஜராத்தில் இருந்து மிக அதிகமாக 193 பேர் சென்றுள்ளனர். தமிழகத்திலிருந்து 32 பேர் சென்றுள்ளனர்.

நடப்பாண்டு 910 பேர் யாத்திரை சென்று வந்தது சாதனையாகக் கருதப்படுகிறது. 2012-ல் 774 பேரும், 2011-ல் 761 பேரும் மானசரவோர் யாத்திரை சென்றனர். 2013-ல் பெய்த கடும் மழையின் காரணமாக புனிதப் பயணம் முடித்தவர்கள் வெறும் 106 பேர் மட்டுமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x