Published : 29 Sep 2014 03:25 PM
Last Updated : 29 Sep 2014 03:25 PM
ஐ.நா. பொதுக் கூட்டத்தில் தமது நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேச்சில் இல்லாத அனைத்து அம்சங்களும் இந்தியப் பிரதமர் மோடியின் பேச்சில் இருந்ததாக பாகிஸ்தான் பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது.
பாகிஸ்தானின் பிரபல பத்திரிகையான 'டெய்லி டைம்ஸ்' திங்கள்கிழமை 'ஐ.நா.-வில் மோடி' என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை காட்டிலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து வகையிலும் ஐ.நா. கூட்டத்தில் பேசி, அனைவரையும் வசீகரித்ததாக குறிப்பிட்டு புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
மேலும் அந்த தலையங்கத்தில், "ஐ.நா.வில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்ட நரேந்திர மோடி, அவரது பேச்சில் தனது நாட்டின் பண்டைய கலாச்சாரத்தை கேட்போருக்கு உண்ர்த்தும் விதமாக பேசினார். அமெரிக்க மக்களும் இந்தியக் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளும் விதத்தில் மோடி பேசினார்.
ஆனால், ஷெரீப் மிகவும் குறுகிய மனப்பான்மை உடையவராக தோற்றமளித்தார். நரேந்திர மோடி பெற்றிருந்த அனைத்தும் ஷெரீபிடம் காண முடியவில்லை என்பதை பாகிஸ்தான் மக்களே உணர்ந்தனர்.
முக்கியத்துவத்தைத் தாண்டி, பாகிஸ்தான் குறித்து மோடி பெரிதாக பேசவில்லை. அவரது பேச்சில், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள், சில கொள்கைகளை சாதிக்கும் நோக்கத்துடன் பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரிப்பதாகவும் குற்றம்சாட்டிப் பேசினார். பயங்கரவாதத்துக்கு அளிக்கும் ஆதரவால், பாகிஸ்தான் பலவற்றை இழந்ததையும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தவிர, முழுக்க முழுக்க இந்தியாவின் மக்கள்தொகை, அதனால் இருக்கும் பலன்கள், உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவம், பருவநிலை மாற்றம், வறுமை ஒழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு என பல விஷயங்களில் அவரது பேச்சில் பொதுப்படைத் தன்மை இருந்தது" என்று பாகிஸ்தான் பத்திரிகை குறிப்பிட்டு எழுதியுள்ளது.
மேலும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பேச்சில் அனைத்து நாடுகளையும் வசீகரிக்கவில்லை என்றும், பாகிஸ்தானின் முக்கியத்துவங்களை அவர் குறிப்பிடத் தவறியதாகவும் அந்நாட்டுப் பத்திரிகை மறைமுகமாக சாடியுள்ளது.
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி, தனது இந்த பயணத்தின் முக்கிய நிகழ்ச்சியாக ஐ.நா.வில் உரையாற்றினார். அப்போது, அவர் தனது உரையில் >எந்த ஒரு தனி நாடும் உலகத்துக்கு கட்டளையிட முடியாது என்று தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT