Published : 11 Dec 2018 02:46 PM
Last Updated : 11 Dec 2018 02:46 PM
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், மின்னணு வாக்கு எந்திரத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி, தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது.
மேலும், வாக்கு எந்திர தணிக்கை எந்திரத்தின் மூலம் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 7-ம் தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி(டிஆர்எஸ்) கட்சி 86 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
கருத்துக்கணிப்புகளையும் மிஞ்சிய அளவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி முன்னணி பெற்று, அசுரப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்நிலையில், மின்னணு வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று சந்தேகித்து தேர்தல் ஆணையத்திடம் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் உத்தம் குமார் ரெட்டி ஹைதராபாத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “ மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். ஆதலால், வாக்கு எந்திர தணிக்கைச் சீட்டு மூலம் மீண்டும் வாக்கு எண்ணிக்கையை அனைத்துத் தொகுதிகளுக்கும் நடத்த வேண்டும் என்தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இதற்காக காங்கிரஸ் கட்சியின் அனைத்து வேட்பாளர்கள் சார்பில் கடிதம் பெறப்பட்டு அது தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT