Published : 03 Dec 2018 04:14 PM
Last Updated : 03 Dec 2018 04:14 PM
குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த காலத்தில் 2002 முதல் 2006-ம் ஆண்டுகளுக்கு இடையே 22- பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கைக்குப் பதில் மனுத் தாக்கல் செய்ய குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கிறிஸ்துமஸ் வரை காலஅவகாசம் வேண்டும் என்ற குஜராத்அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரும் 12-ம் தேதிக்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
குஜராத் முதல்வராக மோடி இருந்த போது, கடந்த 2002 முதல் 2006-ம் ஆண்டுவரை 22 பேர் தீவிரவாதிகள் என்ற போர்வையில் போலீஸாரல் என்கவுன்ட்டர் செய்து கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதிகள் என்று கூறி கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் 22 வயது முதல் 37 வயது உடையவர்களாக இருந்தனர்.
இவர்கள் கொலையில் உள்நோக்கம் இருப்பதால், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி பி.ஜி. வர்கீஸ், கவிஞர் ஜாவித் அக்தர் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2007-ம் ஆண்டு பொதுநலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்தமனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த 22 என்கவுன்ட்டர்கள் குறித்தும் விசாரணை நடத்தவும், விசாரணையைக் கண்காணிக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி எச்.எஸ் பேடி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது. இந்தக் குழுவின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும்படி அப்போது முதல்வராக மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே மனுதாரர்களில் ஒருவரான வர்கீஸ் கடந்த 2014-ம் ஆண்டு இறந்துவிட்டார்.இந்நிலையில், விசாரணையை முடித்து, ஓய்வு பெற்ற நீதிபதி எச்.எஸ். பேடி அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்துவிட்டார்.
இந்த அறிக்கை குறித்த விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே. கவுல், கே.எம். ஜோஸப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தத.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும், நித்யா ராமகிருஷ்ணனும் ஆஜராகினார்கள். குஜராத் அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார்.
அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் குறிப்பிடுகையில், குஜராத்தில் 22 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. விசாரணை அறிக்கையும் கிடைத்துவிட்டது. என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகிய பிரசாந்த் பூஷன், நித்யா ராமகிருஷ்ணன், விசாரணை அறிக்கையின் நகல் தங்களுக்கு தர வேண்டும் என நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அறிக்கையை உடனடியாக யாருக்கும் பகிரக்கூடாது, சில பொறுப்புகள் இருக்கிறது என்று கூறி தங்களின் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய அனுமதி கோரினார்.
மேலும், விசாரணை அறிக்கை தங்களின் பதில் மனுவைத் தாக்கல் செய்ய கிறிஸ்துமஸ் வரை அனுமதி வேண்டும் என்று துஷார் மேத்தா கோரினார்.
ஆனால், அனுமதி மறுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வரும் 12-ம் தேதிக்குள் குஜராத் அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT