Last Updated : 29 Dec, 2018 05:51 PM

 

Published : 29 Dec 2018 05:51 PM
Last Updated : 29 Dec 2018 05:51 PM

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நாளை மறுநாள் தாக்கல்: ஆளும் பாஜகவைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் தீவிரம்

முஸ்லிம்களின் முத்தலாக் முறை மீதான மசோதா நாளை மறுநாள் (டிச. 31) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. திருத்தம் செய்யப்பட்ட இந்த மசோதாவை நிராகரிக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இதனால், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மாநிலங்களவையில் அமலாகுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாதது காரணம்.

கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் முத்தலாக் முறை தடை செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு, 'முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு (திருமண உரிமைகளின் பாதுகாப்பு) சட்டம் 2017' எனும் பெயரில் கொண்டுவந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவின் சில அம்சங்கள் மீது எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநிலங்களவையில் நிறைவேறாமல் மசோதா  நிலுவையில் இருந்தது. பிறகு மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்ட மசோதா, கடந்த வியாழக்கிழமை அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக முத்தலாக் மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின் கடந்த செப்டம்பரில் அவசர சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. இது அடுத்த ஆறு மாதங்களில் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நிறைவேற்றப்படுவது அவசியம்.

இந்நிலையில், திங்கள் அன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் மசோதா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு 93 உறுப்பினர்கள் உள்ளனர். இதைவிட அதிகமாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 112 உறுப்பினர்கள் உள்ளனர். இவ்விரண்டு கூட்டணிகளிலும் சேராத கட்சிகளுக்கு 39 உறுப்பினர்கள் உள்ளனர்.

உதவிவந்த அதிமுக, பிஜு ஜனதா தளம்

மற்ற விவகாரங்களில் மத்திய அரசிற்கு அதிமுக மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மாநிலங்களவையில் உதவி வந்தன. ஆனால் முத்தலாக் விவகாரத்தில் இந்த இரண்டு கட்சிகளும் மக்களவையில் எதிர்த்ததுபோல மாநிலங்களவையிலும் முத்தலாக் மசோதாவை எதிர்க்கும் நிலைப்பாட்டில் உள்ளன.

ஒரே சமயத்தில் முத்தலாக் கூறும் முறையை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரிக்கின்றன. அதன் மீதான சட்டமசோதா, அனைத்துத் தரப்பின் ஆலோசனையுடன் சமூகத்திற்கு ஏற்ற வகையில் இல்லை என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால், அந்த மசோதாவை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, திங்கள்கிழமை காலை காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனை செய்யவும் திட்டமிட்டு வருகின்றனர்.

பாதி உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு

வழக்கமாக, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் அரசியல் சாசன மசோதாவிற்கு, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அவையில் இருந்து பாதிக்கும் மேலானவர் ஆதரவு அவசியம். சாதாரண சட்ட மசோதாவாக இருந்தால், அவையில் உள்ள பாதி உறுப்பினர்கள் இடையே நடைபெறும் வாக்கெடுப்பில் அதிக ஆதரவே போதுமானது.

சாதாரண மசோதா

இந்நிலையில், முத்தலாக் மசோதா ஓர்  அரசியல் சட்ட மசோதாவாகக் கருதப்படுகிறது. ஆனால் சாதாரண சட்ட மசோதாவாகக் கருதப்பட்டு,  மத்திய சட்டத்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x